Wednesday, 12 November 2014

'பிறக்காத பிள்ளைக்கு தாலாட்டு' - 'தினமலர்' &'தினகரன்' பொய்ப்பாட்டு...!




தினமலரில் அடிக்கடி ஒரு அறிவிப்பு வரும்.

"தினமலர் நிருபர் என்று சொல்லிக்கொண்டு யாரும் செய்தி வெளியிட அன்பளிப்பு கேட்டால் உடனே எங்களுக்கு தகவல் சொல்லுங்கள்.அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்."

இதைக் கண்டவுடன் படிப்பவர்கள் அனைவரும் தினமலர் லஞ்சத்தை அடியோடு எதிர்க்கிற‌து. தனது நிருபர்களிடம் இருந்தே அதை நடைமுறைப்படுத்துகிறது என நினைப்பார்கள்.

தினமலர் நிருபர்கள் எல்லா இடங்களிலும் கவர் வாங்குகிறார்கள் என்று சொல்ல முடிகிறதோ இல்லையோ, ஆனால் ஆங்கில ஊடகங்களின் நிருபர்களைப் போல அதிகார மட்டத்திடம் ஒரு Obligation எனச் சொல்லிக் காரியம் சாதிப்பவர்கள் தான். 

கவர் வாங்கும் பத்திரிகையாள‌ர்களை விட இவர்கள் சாதிக்கும் காரியத்தின் 'மதிப்பு' மிக அதிகம். விதி விலக்குகள் ஒன்றிரண்டு இருக்கலாம். விதிவிலக்குகள் தினமலருக்கு மட்டுமல்ல அனைத்துப் பத்திரிகைகளுக்கும் உண்டு .

'தினமலர்' நிருபர் செய்தி வெளியிட லஞ்சம் வாங்கினால் அதன் நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்கிற‌து. அதன் முதலாளி ஆதாயம் எதிர்பார்த்து செய்தி வெளியிட்டால் யார் நடவடிக்கை எடுப்பது..?
*


பதவியேற்ற ஓரிரு நாளில் ஒவ்வொரு பத்திரிகையும் தங்கள் விருப்பு வெறுப்புக்களின் அடிப்ப‌டையிலும்,தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலும் யார் யாருக்கு அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் கிடைக்கும் எனச் செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். 

வெற்றி பெற்றதில் யாரையாவது ஒருவரைச் சுட்டிக்கட்டி அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என ஊகச் செய்திகளை பிற ஊடகங்கள் வெளியிட்டன. நாட்டின் பிற ஊடகங்களே எதிர்பார்க்காத செய்தியை தமிழ்ப் பத்திரிகைகளான தினகரன் மற்றும் தினமலர் வெளியிட்டன. 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றுப்போன இல.கணேசனுக்கு மத்திய அமைச்சர் பதவி,அதுவும் கேபினட் அந்தஸ்தில் கிடைக்கும்,மேலும் என்ன இலாகா கிடைக்கும் என அறுதியிட்டுச் சொல்லின. 

பொதுவாய் இல.கணேசன் என்றாலே பத்திரிகைகள் பம்முவதும்,ஆதரவுச் செய்திகளை அள்ளித் தெளிப்பதும் தெரிந்த விஷயம் தான்.ஆனாலும் தோற்றுப்போன ஒருவருக்கு அமைச்சர் பதவி என்று எழுதுவதற்கு எவ்வளவு பொய் நெஞ்சுரம் வேண்டும்.? 

அது இவர்களுக்கு நிறைய இருக்கிறது.

ஜூன் 10,2014 தினமலர் செய்தி


நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற பின்பு இரு வாரங்கள் கழித்து இந்தச் செய்தியை தினமலர் வெளியிடுகிறது. தோற்றுப்போன மனிதருக்கு அமைச்சர் பதவி என்று செய்தி வெளியிட்டால் படிக்கும் வாசகன் என்ன நினைப்பான் என்று துளியும் கருதவில்லை.அது தனது வாசகனை எடை போடுவது இப்படித்தான். தனது ஆதாயம் இருக்கிறது என்று எண்ணிய‌ பின்பு எதற்கும் துணிவது தானே அவர்கள் 'நியாயம்..'?

அமைச்சரவை விரிவாக்கம் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை.ஆனாலும் தினமலர் ஓய‌வில்லை.இல.கணேசன் அமைச்சரானால் என்னென்ன காரியம் சாதிக்க வேண்டும் என பெரிய லிஸ்ட் வைத்திருக்கிறது போலும்.


அடுத்ததாக அக்டோபர் 13 அன்று டீக்கடை பெஞ்சில் இல.கணேசன் அமைச்சராகப் போகிறார் என பொய்யை மீண்டும் எழுதுகிறது. கவர்னர் பதவியையே துச்சமென மதித்தவர்,நாட்டுக்குச் சேவை செய்ய வெயிட்டிங் லிஸ்டில் காத்திருக்கிறார் என ஒளிவட்டம் சுற்றுகிறது.
**



தினம‌லர் யோக்கியதைக்கு சற்றும் குறைந்ததல்ல,தினகரன் யோக்கியதை. 

தனது பிழைப்புக்காக ஒரு தட்டில் சாப்பிட்டவனுக்கு விஷம் வைக்கவும் தயங்காத மாறன் சகோதரர்கள் இன்று மிகப்பெரிய இக்கட்டில் இருக்கிறார்கள். திகாரில் களி எண்ணுவதை எப்படியாவது தவிர்க்க நினைக்கிறார்கள்.அதனால் தான் பாரதீய ஜனதாவை தங்கள் வசமாக்க ஆதரவுச் செய்திகளை அள்ளித் தெளிக்கிறார்கள். அதிலும் இல.கணேசனை குளிர்வித்தால் அவர் நெட்வொர்க் வழியாக‌ எதும் காரியம் கிட்டுமா என முயற்சிக்கிறார்கள். அதனால் தான் இச்செய்தி.




தேர்தல் முடிவடைந்து பதவியேற்பு நடைபெறும் முன்னர் இல.கணேசன் மத்திய அமைச்சர் ஆகிறார் என ஒரு செய்தி.  

ஆனாலும் காரியம் கைகூடவில்லை என்பதால் அதன் பின்பு சற்று இடைவெளி விட்டு இன்னொரு செய்தி.

ஜூன் 7,2014 தினகரன் செய்தி

இன்றோ மோடி தனது அமைச்சர‌வையை விரிவாக்கம் செய்து விட்டார். இல.கணேசனுக்கு திருவோடு தான் கிடைத்துள்ளது. இல.கணேசன் அமைச்சராவதை அவரை விட ராமசுப்பையர் மகன்கள்,பேரன்கள் மற்றும் கருணாநிதியின் பேரன்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருத்திருக்கிறார்கள் போலும்.

அதனால் வரிந்து கட்டி இல.கணேசனே மறந்து போனாலும் அவர் அமைச்சர் ஆகிறார்,ஆகப்போகிறார் என பரலோக ராஜ்யம் சமீபித்திருப்பதாய் பாதிரிகள் பிரசங்கம் போல,நம்முள் பரவசத்தை உருவாக்குகிறார்கள். குறி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து இல கணேசனுக்கு ஐ.நா.சபை தலைவர் பதவி கிடைக்கும் என இரண்டு ஊடகங்களும் எழுதும் என எதிர்பார்க்கலாம். கொஞ்சம் அசந்தால் இவர்களே இல.கணேசனை கேபினட் கூட்டம் நடக்கும் பொழுது உள்ளே தள்ளிக் கதவைப் பூட்டி விடவும் தயங்க மாட்டார்கள்.

சேலம் சிவராஜ் சித்த வைத்தியசாலை விளம்பரங்களில் ஒன்றைக் கண்டிப்பாய்ப் பார்க்கலாம்.எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என. 

அதன் உள்ளர்த்தம் வேறெங்கும் போய் ஏமாந்து விடாதீர்கள்,எங்களிடம் மட்டும் வந்து ஏமாறுங்கள் என்பது தான். நிருபர் என்று சொல்லிக் கொண்டு யாரும் காசு கேட்டால் கொடுக்காதீர்கள்,எங்களை அணுகுங்கள் என்ற தினமலர் அறிவுப்பும் இப்படித்தான்.

இவர்கள் எழுதும் கிசுகிசுக்கள் பெரும்பாலும் இப்படித் தான் பிறக்கின்றன. ஆனால் அதன் பொய்மையை இந்தச் செய்தியைப்போல் உரிக்க முடிவதில்லை.

தனது நலனுக்காய் எந்த சமரசத்தையும் எவர் காலிலும் விழத் தயார் நிலையில் இருப்பவர்கள் தான் நமது பத்திரிகை முதலாளிகள்.அப்படிப்பட்டவர்கள் பொய்ச் செய்தியை வெளியிட்டுத் தரகு வேலை செய்வதற்கா அஞ்சப் போகிறார்கள்.? தனக்கு ஆதாயம் கிடைப்பதற்காய் கூச்சம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் அதனைச் செய்வார்கள். 

தினமலரும் தினகரனும் அதைத்தான் செய்கின்றன. வாசகன் தான் வழக்கம் போல் ஏமாளி.


2 comments:

Anonymous said...

10000000%%% true

Anonymous said...

10000000%%% true