Saturday 23 August 2014

இன்று நக்கீரன் காமராஜ் ; நாளை ரிப்போர்ட்டர் வரதராஜன்..!

அன்று காவல்துறையின் பிடியில் வரதராஜன்;ஆறுதல் கூறும் கோசல் ராம்.
(அன்று வரதராஜனுக்கு ஆறுதல் கூறிய கோசல்ராம், இன்று வரதராஜனால் பிறர் அவருக்கு யாராவது ஆறுதல் கூற வேண்டிய நிலையில் தான் இருக்கிறார்.)

டந்த 17 நாட்களுக்கு முன் வெளியான ஜூனியர் விகடனில் கவர் ஸ்டோரி ஒன்று வெளியிட்டிருந்தார்கள்.அது இது தான்.

 ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்ப‌ட்டு மரண‌மடைந்த சாதிக் பாட்சா மனைவி எழுதிய கடிதம் தொடர்பானது. சாதிக் பாட்சாவுக்குப் பிறகு அவர் மனைவி கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராகப் பொறுப்பு வகிக்கிறார் என்றும், நிறுவனத்திலிருந்து மட்டுமல்ல,தொடர்புடைய அனைத்தில் இருந்தும் விலகுவதற்கு குறிப்பிட்ட தொகையை கேட்டு கோரிக்கை வைத்ததாகவும்,அதனை ஏற்றுக் கொண்ட ஆ.ராசா மற்றும் அவர் தொடர்புடையவர்கள் இப்பொழுது வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பதாக‌வும் அதனால் கோபமான மனைவி ரேகா பானு இப்பொழுது கம்பெனிகள் சட்ட வாரியம், மற்றும் இதர இயக்குனர்கள் அனைவருக்கும்  கடிதம் எழுதியிருப்பதாகவும் விரைவில் இப்பிரச்சனை பூதாகரமாய் வெடிப்பதோடு மட்டுமல்லாமல் மேலும் பல சிக்கல்கள் வெடிக்கும் எனவும் கழுகார் பகுதியில் எழுதப்பட்டிருந்தது.


 ஜு.வி. வாரமிருமுறை இதழ் வெளியான 17 நாட்களுக்குப் பிறகு நேற்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டரில் அந்தக் கட்டுரையை அப்படியே தழுவி,சுருக்கியும் திருத்தியும் காப்பியடித்து ஒரு செய்திப் பதிவு இன்று வெளியாகியிருக்கிறது.

அது இது தான்.


ஜூனியர் விகடனை காப்பி அடித்து தான் துப்பறிந்து கண்டுபிடித்து எழுதியது போல 'குமுதம் ரிப்போர்ட்டர்' எழுதுவது குறித்து நாம் விமர்சிக்க ஒன்றும் இல்லை.ஆனால் 'குமுதம் ரிப்போர்ட்டர்' வாரமிருமுறை இதழ்  புதிதாய் எழுதிய விஷயங்கள் குறித்து நாம் பேச‌ செய்தி இருக்கிறது.






ஆ.ராசாவும்,நக்கீரன் இணையாசிரியர் ஆர்.காமராஜூம் பஞ்சாயத்து நடத்தியதாகவும் அதில் ஒப்புக் கொண்ட படி பணம் ரூ.50 கோடியைக் கொடுக்க மறுக்கிறார்கள் என்பது தான் குமுதம் ரிப்போர்ட்டரின் புதிய குற்றச்சாட்டு.

மேலும் இந்த பஞ்சாயத்தில் அந்த நிறுவனத்தின் இயக்குனரான ஆ.ராசா,.காமராஜ்,இதர அனைத்து இயக்குனர்கள்,மற்றும் சதீஷ்,ரமேஷ்,சுரேஷ்,ராம்கணேஷ் ஆகியோர் ஈடுபட்டதாகவும் எழுதியிருக்கிறது.இதனை முன்னிலைப்படுத்தித் தான் இந்த செய்திப்பதிவே வெளியிடப்பட்டுள்ள‌து.அதனையே தலைப்பாக வைத்து இருவரின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

மறைந்த சாதிக் பாட்சா மனைவி இவர்கள் இருவர் மீதும் பகிரங்கமாய் குமுதம் ரிப்போர்ட்டரில் எந்தக் குற்றச்சாட்டும் தெரிவிக்க‌வில்லை.இது தொடர்பாய் எந்த அமைப்பிலும் புகார் தெரிவிக்கவும் இல்லை.முதல் முதலாய் 'குமுதம் ரிப்போர்ட்டர்' தான் இந்தப் பிரச்சனையில் இந்த இருவர் மீதும் பகிரங்கமாய் குற்றம் சாட்டி அவர்களை தலைப்பு வைத்து அவர்களின் படங்களை வெளியிட்டுச் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்திப்பதிவில் நமக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

1) ரூ.50 கோடி தருவதாக ஆ.ராசாவும்,காமராஜூம் நடத்திய பஞ்சாயத்து எங்கு,எந்த நாளில்  நடைபெற்றது..? இவர்களுடன் கலந்து கொண்டவர்கள் என்று சிலரை எழுதும் குமுதம் ரிப்போர்ட்டர் இதை ஏன் எழுதவில்லை..?ரூ.50 கோடி என்று எழுதுவ‌தற்கு என்ன ஆதாரம்..?

2)ஆ.ராசாவும் காமராஜும் பஞ்சாயத்து பேசினார்கள் என்பது தான் ரிப்போர்ட்டரின் குற்ற‌ச்சாட்டு,அதனை முன் வைத்துத் தான் இந்த கவர் ஸ்டோரியே வெளியிடபப்ட்டிருக்கிறது. இது தொடர்பாய்,இருவருக்கும் இதில் இருக்கும் பங்கு குறித்து எந்த வலிமையான ஆவணங்களும் ரிப்போர்ட்டாரால் முன் வைக்கப்ப‌டவில்லை.ஆக இது கற்பனை என்றும் இட்டுக்கட்டப்பட்டது என்றும் வாசகன் கருத இடம் இருக்கிறது.

அப்படி இருக்கையில் குறைந்த பட்சம் கீழ்க்கண்ட விஷயங்களையாவது செய்திருக்க வேண்டும்.

குற்ற‌ம் சாட்டப்ப‌ட்டவர்களுக்கு அவர்கள் தரப்பை வெளியிடக் குறைந்த பட்ச வாய்ப்பையாவது அளித்திருக்கலாம்.அது தான் குறைந்த பட்ச தொழில் தர்மம்.அதை இவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு தான்.

இதில் தொடர்புடைய ஆ.ராசா,காமராஜ் மற்றும் ஆ.ராசாவின் சகோதரர் கலியபெருமாள்,இதர இயக்குனர்கள்,இதில் தொடர்புடைய இதர 4 பேர்கள் ஆகிய அனைவரும் உயிருடன் தான் இருக்கிறார்கள்.அவர்கள்  யாரிடமாவது தொடர்பு கொண்டு அவர்கள் தரப்புக் கருத்தை வாங்கி வெளியிட்டிருக்கலாம்.

3) குறைந்த பட்சம் இதில் முக்கிய தரப்பான சாதிக் பாட்சாவின் மனைவி ரேகா பானுவிடமாவது ஒரு நேர்காணலை வாங்கிப் போட்டிருக்கலாம்.
புகைப்படம் வைப்பதிலும்,தலைப்பு வைப்பதிலும் காட்டிய வன்மத்தை அவர்கள் கருத்தை வாங்கிப் போடுவதில் சிறிய அக்கறையைச் செலுத்தியிருக்கலாமே..?

4) அதிலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆ.ராசா முன்னாள் மத்திய அமைச்சர். வழக்குரைஞர். நாடே திரும்பிப் பார்த்த ஸ்பெக்ட்ரம் வழக்கின் முதன்மைக் குற்றவாளி. தன் தரப்பில் நியாயம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருப்பவர்.தனது செயல்கள் அனைத்திலும் முன்னாள் பிரதமர்,முன்னாள் நிதி அமைச்சர் உட்பட அனைவரின் தொடர்பு இருக்கிறது என்று சொல்லி வருபவர்.அவரிடம் கருத்து வாங்கிப் போட்டிருக்க வேண்டுமல்லவா..?

அதைப்போல இதில் குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு முக்கியப் புள்ளியான  காமராஜ் ,ரிப்போர்ட்டரைப் போல இன்னொரு பத்திரிகையான நக்கீரனின் இணை ஆசிரியர்.அவரிடம் இந்தக் குற்றச்சாட்டுக்களைக் கூறி அவர் தரப்பு விளக்கத்தை வாங்கி வெளியிட்டிருக்க வேண்டுமா இல்லையா..?

அல்லது மேற்கண்ட இருவரையும் தொடர்பு கொண்டு அவர்கள் கருத்துச் சொல்ல மறுத்திருந்தால் அதனைப் பதிவு செய்திருந்திருக்கலாம். இவர்கள் அனைவரும் உயிரோடு தான் இருக்கிரார்கள்.இவர்களைத் தொடர்பு கொள்வதோ,அல்லது தொலைபேசியில் பேசுவதோ பெரிய சிரமம் இல்லை.
அல்லது குறைந்த பட்சம் கிரீன் வேல்யூ புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரிடமாவதோ தொடர்பு கொண்டு அவர்கள் கருத்தை வாங்கி வெளியிட்டிருக்கலாம். சாதிக் பாட்சா மனைவி எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தின் நகலும் கூட இல்லை.


இவர்களாகவே ஒரு குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.குற்றச்சாட்டை நிருபிக்க துரும்பளவு ஆவணம் கூட இல்லை, குற்றம் நடந்திருக்கிறது என்பதற்கான முகாந்திரத்தை இவர்கள் எழுத்திலிருந்து நம்மால் நம்ப முடியவில்லை.குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் தரப்பிலான விளக்கமும் பெற முயற்சிக்கவில்லை.

இத்தனைக்கும் இதன் ஆசிரியர் கோசல்ராம் சில காலம் முன் வரை கிரைம் பீட் பார்த்தவர்.ஆனால் அடிப்படை ஆதாரமற்ற செய்தி குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவ‌ந்திருக்கிறது.

அலுவலகத்தில் அமர்ந்து எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் உள்நோக்கத்துடன்,வன்மத்துடன் எழுதி பக்கங்களை நிரப்புகிறார்கள்.பிளாக் மெயில் இதழியலுக்கு இது எந்த விதத்தில் குறைந்தது..?

இந்த செய்திக்கு இதன் வெளியீட்டாளர் வரதராஜனும் குழும ஆசிரியர் கோசல்ராமும்,நிருபர் ச.செல்வராஜூம்  தான் பொறுப்பு.( கோசல் அண்ணாச்சி நீங்க வரது மேல இப்ப ரொம்பக் கோவமா இருப்பீங்கன்னு எங்களுக்குத் தெரியும். கடைசி வரைக்கும் இருந்து போராடுங்க.)

அதிலும் கோசல்ராமோ,செல்வராஜோ மட்டும் நினைத்திருந்தால் இந்த செய்தி வர துளியும் வாய்ப்பு இல்லை.முழுக்க முழுக்க வரதராஜன் மன விருப்பபடி தான் வந்துள்ளது. அதிகார வர்க்கத்தின் துணையுடன் ரியல் எஸ்டேட் பார்ப்பவர்கள் எல்லாம் குறுக்கு வழியில் பத்திரிகை வெளியீட்டாளரானால் இது தான் நடக்கும். 

 பெரும்பாலும் எந்தவொரு ஊடகத்திலும், சக ஊடகம் தொடர்புடையவர்கள் மீது வலுவான,ஆதாரத்துடன் கூடிய குற்றச்சாட்டு கூறப்பட்டாலும், இவ்வள‌வு ஏன் குற்றமே நிரூபிக்கப்பட்டாலும் அது வெளிவராது.தவிர்த்து விடுவார்கள்.ஏனென்றால் நாளை நமது களவாணித்தனத்தை அவன் வெளிப்படுத்தி நாறடிப்பான் என்ற அச்சம் தான்.இது கூட்டுக் களவாணித்தனத்துக்கு எடுத்துக்காட்டு .

ஆனால் காமராஜ் தொடர்புடைய இந்தச் செய்தியோ, குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை என்றாலும்,சக ஊடகம் தொடர்புடையவர் என்றாலும் அவர்கள் மீதான காழ்ப்புணர்வால் வன்மத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு இடையே வேறு எதுவும் பகை உண்டா என்று நமக்குத் தெரியவில்லை.இன்றைய நிலையில் நாம் வலிமையாக இருக்கிறோம்,குமுதம் சாம்ராஜ்யம் இருக்கிறது இதுவே காலம் காலமாய் தொடரும் என்ற திமிரில் இதனை  வரதராஜன் செய்துள்ளார்.


வரதராஜனின் வன்மத்துக்கு பலியான காமராஜ் ஒன்றும் நேர்மையான பத்திரிகையாள‌ர் இல்லை தான்.

தான் பணியாற்றும்  ஊடகத்தில் எத்தனை எத்தனை பேருக்கோ எதிராக உள்நோக்கத்துடன்,ஆதாரமில்லாமல் பரபரப்புக்காகவும்,சுயநலனுக்காகவும் செய்தி வெளியிட்டவர் தான்.அவருக்கு இன்று ஏற்பட்ட அசிங்கமும் வலியும் இதற்கு முன் அவரால் நிறைய நபர்களுக்கு ஏற்பட்டுள்ள‌து.


 இத்துடன் இந்த அத்தியாயம் நிறைவு பெறலாம்.இதில் வரதராஜன் காமராஜை அசிங்கப்படுத்தியதாக குதூகலமடையலாம்.ஆனால் தொடர் முற்றுப்பெறாது.
அடுத்த அத்தியாயம் ஒன்று ஆரம்பிக்கும்.

வரதராஜன் இப்பொழுது விடாப்பிடியாய் ஆக்கிரமித்து அமர்ந்திருக்கும் குமுதம் சாம்ராஜ்யத்தில் ஆயிரம் பஞ்சாயத்து இருக்கிறது. நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். வரதராஜன் பொதுவெளியில் அம்பலப்பட,அசிங்கப்பட‌ அவர் தொடர்புடைய பல விஷயங்கள் இருக்கின்றன.தூணளவு ஆதாரங்கள் அப்பொழுது தேவையில்லை.துரும்பளவு கிட்டினாலே போதும்.காமராஜ் அதனை தூணாக்குவார்.இப்பொழுது ஒரு வாரமிரு பத்திரிகையின் இணையாசிரியர் என்று வரதராஜனால் சொல்லப்படும் காமராஜ் அப்பொழுது பழி தீர்ப்பார்.

நக்கீரன் அட்டை மற்றும் ஊரெங்கும் ஒட்டும் சுவரொட்டிகளை வரதராஜன் குனிந்த தலையுடன் அலங்கரிப்பார்.காமராஜ் அன்று நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார்.

இவர்கள் என்றும் திருந்தப்போவதில்லை

ஆனால் இது போன்ற பேர்வழிகளால் பாதிக்கப்ப‌டுவது என்னவோ இத்துறையும்,உண்மையாய் பணியாற்றும் ஊடகவியலாளர்களும் ,இவர்கள் எழுதுவதெல்லாம் உண்மை என்று நம்பி, காசு கொடுத்து வாங்கிப்படிக்கும் அப்பாவி வாசகனும்  தான்.

தொடர்புடைய இணைப்புகள்

http://kalakakkural.blogspot.in/2011/11/blog-post_28.html

http://kalakakkural.blogspot.in/2014/03/blog-post_26.html

http://kalakakkural.blogspot.in/2011/11/blog-post_08.html

http://kalakakkural.blogspot.in/2012_03_01_archive.html

http://kalakakkural.blogspot.in/2012/01/110.html 

http://kalakakkural.blogspot.in/2014/08/blog-post_20.html

No comments: