பத்திரிகையாளர் கோசல்ராம் முதலாளியாக மாறி ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை. கோசல்ராம் நமது கலகக்குரல் வாசகர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் தான்.
ஒவ்வொரு கணமும் முகநூல்,டிவிட்டர்,வாட்ஸ் அப் என தினசரி இப்பொழுது செய்திகள் வந்து குவியும் காலம் . ஜூனியர் விகடன், நக்கீரன், தமிழக அரசியல், குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற வாரமிருமுறை வெளிவரும் 'துப்பறியும்' இதழ்களே எத்தனையோ செய்திகளைத் தவற விடுகின்ற அளவுக்குச் செய்திகள் இருக்கின்றன. அதுவும் இப்பொழுது தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் தமிழக அரசியல் களம் வேறு சூடு பிடித்துள்ளது. பத்திரிகையாளர்கள் எல்லாம் படு பிசியாக இருக்கின்றனர்.
வார இதழ்களுக்கோ பல நெருக்கடி இருக்கும். தாமதமான செய்தி என்று எதையும் தவற விட்டு விட முடியாது, புத்தம் புது விஷயங்களை அப்டேட் செய்து தன்னை வேறுபடுத்திக் காட்டி வாரமிருமுறை இதழ்களுடனும் போட்டி போட வேண்டும்.
அதிலும் 'நம்ம அடையாளமோ' புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை. இன்னும் சரியான விநியோக கட்டமைப்பு இல்லை. இவர்களின் போட்டியாளர்களோ மிகப்பெரிய ஜாம்பவான்கள். ஆகவே தன்னை விற்பனையிலும், பொருளாதார ரீதியிலும் நிலை நிறுத்த ரொம்ப மெனக்கெட வேண்டும். 'நம்ம அடையாளமா'னது ஆரம்பத்தில் ஓரிரு இதழ் சில விஷயங்கள் பாராட்டும் படியாகத்தான் இருந்தது. ஆனால் தரமும் விற்பனையும் எக்கேடு கெட்டால் என்ன கல்லாவை மட்டும் முடிந்த மட்டும் நிரப்பினால் போதும் என திருவிழாக் கடைக்கார முதலாளி போல் அடையாளம் முதலாளியும் முடிவெடுத்தது போல் தெரிகிறது. (சட்டமன்றத் தேர்தல் வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணக் கூடாதா ? )
நாம் சன் குழுமத்தின் தமிழ் முரசு 'துட்டுக்குச் செய்தி' வெளியிட்டது நினைவிருக்கலாம். அதைப்போல 'நம்ம அடையாளமும்' களமிறங்கி விட்டதோ என எண்ணுகிறோம்.
சமீபத்திய அதன் செயல்பாட்டை வைத்து சிறிய சந்தேகத்தை மட்டும் உங்கள் முன் வைக்கிறோம். நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.
கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி 'நம்ம அடையாளம்' தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் குறித்து கவர் ஸ்டோரி வெளியிட்டது. அதன் பின் (செப்டம்பர் 10 ஆம் தேதியிட்ட இதழ் தவிர ) வெளியான அனைத்து இதழ்களும் 6 இதழ்கள் அக்டோபர் 18 அன்று நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தான் கவர் ஸ்டோரி.
நாட்டில் கோகுல்ராஜ் கொலை வழக்கு, யுவராஜ், அன்புமணி வழக்கு, விஷ்ணுபிரியா மரணம், மாட்டுக்கறி, அட்டாக் பாண்டி, அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம், நடிகர் விஜயின் புலி பட பஞ்சாயத்து என எவ்வளவோ செய்திகள் குவிந்திருக்கின்றன. அவைகளுக்கு கவர் ஸ்டோரியில் இடமில்லையா?
இவர்களது சக போட்டியாளர்கள் எத்தனையோ செய்திகளை விதம்விதமாய் அளித்தும், அவர்களாக உருவாக்கியும் ,கண்டுபிடித்தும் தங்கள் சந்தையைத் தக்க வைக்கிறார்கள், புதிய வாசகர்களை வாங்கத் தூண்டுகிறார்கள். தென்னிந்திய நடிகர் சஙக்த் தேர்தலுக்கு மற்ற இதழ்கள் ஓரிரு பக்கங்களையும், சில நேரங்களில் செகண்ட் கவர் ஸ்டோரி வைத்தும் நிரப்புவதோடு சரி. இவர்களோ ஒரே செய்தியை ஆறு இதழ்களாக கவர் ஸ்டோரியாக வைத்து விதம் விதமாக ஓட்டுகிறார்கள். நாம் மேற்குறிப்பிட்ட செய்திகளை உள்ளேயே போதிய முக்கியத்துவம் இல்லாமல் நிரப்புகிறார்கள்.
நமது கேள்விகள்
இப்படித் தொடர்ச்சியாக 6 இதழ்கள் கவர் ஸ்டோரி வெளியிடும் அவசியம் என்ன இருக்கிறது.? எல்லாக் கவர் ஸ்டோரிகளிலும் நடிகர் விஷால் அணிக்கு ஆதரவு நிலைப்பாடு.
நடிகர் விஷால் அணியினர் வைக்கும் குற்றச்சாட்டுகள் சரியானது என்பதை ஒத்துக்கொள்ளலாம். ஆனால் 6 கவர் ஸ்டோரிகள் வைத்து முதன்மைப்படுத்தும் அளவுக்கு 'நம்ம அடையாள'த்துக்கு இதில் என்ன சிறப்பு அக்கறை ?
அதிலும் சில இதழ்களில் வலிந்து ஆதரவு நிலைப்பாட்டுச் செய்திகள்.
ஒரு இதழின் மொத்த பக்கங்கள் விளம்பரங்கள் போக 37. ஆனால் ஒரு இதழில் விஷால் அணி ஆதரவுச் செய்திகள் அதில் 16 பக்கங்கள். அதற்கு என்ன தேவை.?
நடிகர் சங்கத் தேர்தல் குறித்த செய்திப் பக்கங்களின் வடிவமைப்பை பார்த்தால் அதிக சிரத்தை எடுத்துள்ளதையும் யாரும் அந்த பக்கங்களைத் தவறவிடக்கூடாது என்னும் நோக்கத்தில் வடிவமைத்துள்ளதையும் அறிய முடியும்.
நம்ம அடையாளம் ஆரம்பித்து இது வரை மொத்தம் 22 இதழ்கள் வந்துள்ளது. அதில் 6 இதழ்கள் நடிகர் சஙக்த் தேர்தல் தொடர்பானவை. மொத்த இதழ்களில் 3 இல் ஒரு பகுதி இதழ்கள் நடிகர் சஙக்ப் பஞ்சாயத்து.
அப்படி என்னய்யா இருக்கிறது அதில் ? நடிகர் சங்க இடம் கைமாறியதில் சில கோடிகள் முறைகேடாய் பரிமாறியுள்ளது என்று விஷால் அணியினர் சொல்வது போல இந்த ஸ்டோரிகளின் பின்னே 'நம்ம அடையாள'த்துக்கு எதும் கைமாறியுள்ளதா என்ன?
பிற விஷயங்களைப் புறக்கணித்து இதை மட்டும் முதன்மைப்படுத்தும் அளவுக்கு வணிகரீதியிலும் இதற்கு அளப்பரிய வரவேற்பு இல்லை என்பதை உணர முடியும். ஏனென்றால் வரவேற்பு இருந்தால் ஜூ.வி, நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் போன்றவை இந்நேரம் விட்டு வைத்திருக்காது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.
(ஓட்டுப்பதிவு நாளான இன்று முழுவதும் நடிகர், நடிகைகளை திரையில் காட்டி அனைத்துக் காட்சி ஊடகங்களும் ரேட்டிங்குக்காக செய்யும் கொடுமையையும், தேர்தல் நாளுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிட்டுச் செய்ததையும் ஒப்பிட முடியாது.ஆறு வாரங்கள் அனைத்து காட்சி ஊடகங்களும் தலைப்புச் செய்தி வெளியிட்டால் எப்படி இருந்திருக்கும் யோசித்துப் பாருங்கள்.)
இப்படி நீட்டித்துக்கொண்டே சொல்லலாம்.
நம்ம அடையாளம் இதழுக்கு முதன்மை ஆசிரியராய் இருப்பவர் திரு.கதிர்வேல். நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் தொடங்கி நம்முர் 'தினத்தந்தி'யின் சாணக்கியன் சொல் வரைக்கும் படித்து அதனை விமர்சிப்பவர், அலசி ஆராய்பவர். The Hindu எடிட்டோரியல் குழுவில் நடக்கும் அரசியல் வரைக்கும் கூர்ந்து கவனிப்பவர்.
அவர் இந்த விஷயத்தில் நம்ம அடையாளத்தை எவ்வாறு நியாயப்படுத்துகிறார்? அரசியல் வார இதழ் வரலாற்றில்,கடந்த 35 ஆண்டு காலங்களில் வேறு எதும் இதழ்கள் இப்படி வெளியிட்டிருக்கின்றனவா? அதன் பின்னணி என்ன என்பது குறித்து அவர் அறியத் தந்தால் ஆவலாய் இருக்கிறோம். நமக்குத் தெரிந்து தமிழ்நாட்டின் பிற வார இதழ்களோ, வாரமிருமுறை இதழ்களோ தொடர்ச்சியாய் 6 கவர் ஸ்டோரிகள் வெளியிட்டதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலுக்கு இணையான முக்கியத்துவம் இங்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
இதுதான் திரு.கதிர்வேல் அவர்கள் வலியுறுத்தும் ஊடக அறமா..?
எது எப்படி இருந்தாலும் இந்த கவர் ஸ்டோரிகளுக்கு பின் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
சரத்குமாரும் கோசல்ராமும் சமூக ரீதியாக ஒரே தரப்பினராய் இருந்ததால் நீண்ட காலமாய் நல்ல நெருக்கம் உண்டு. குமுதத்தில் குழும எடிட்டராய் கோலோச்சும் பொழுது கோசல்ராம் செய்த சில காரியங்களுக்கு பிரதியுபகாரமாய்ச் செய்வதாய்ச் சொன்னதை சரத்குமார் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதிலும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் தூத்துக்குடி தொகுதி சரத்துக்கு கிடைக்கும் என வலிந்து தொடர்ந்து எழுதியவர் கோசல். இப்படிச் செய்த பல உதவிகளுக்கு பெரிய அளவிலான சனமானம் இல்லையாம் அதனால் இந்தப்பழி வாங்கல் என்று சொல்லப்படுகிறது.
இன்னொரு தரப்போ, இதனை அடியோடு மறுத்து வேறு விஷயம் சொல்கிறது.
நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக ஆதரவுச் செய்தி வெளியிட சரத்துடன் 'டீல்' பேசியதாகவும், அவரோ குமுதத்தில் கோசல் இருந்த பொழுது கொடுத்த வெயிட்டான ரெஸ்பான்ஸ் கொடுக்கவில்லையென்றும், 'நம்ம அடையாளம்' மிகச் சிறிய அளவிலான பத்திரிகை என்பதாலும், தந்தி, சன் குழும மீடியாக்கள் தன் பக்கம் இருப்பதால் ரொம்பவும் சாதாரணமாக பேசி வெறுங்கையுடன் அனுப்பி விட்டதாகவும் சொல்கிறார்கள். அதனால் கடுப்புடன் எதிரணியான விஷால் கோஷ்டியிடம் 'டீல்' பேசி விஷாலுக்கு ஆதரவு என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவருவதாகவும் சொல்கிறார்கள்.
எது உண்மை என்று தெரியவில்லை. ஆதாரத்துடன் உறுதிப்படுத்த இயலவில்லை. ஆனால் ஊடகத்தின் நடுநிலைமை புரண்டு அறம் தெருவில் நிற்கிறது என்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.
ஆதாயம் இல்லாமல் தெருவில் புரள கோசல் அண்ணாச்சி அடி முட்டாளா என்ன?