Tuesday, 9 April 2013

புதிய தலைமுறை- உண்மையைத் திரித்து உடனுக்குடன்...!




புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்திகள் குறித்தும் அதன் ’நடுநிலைமை’ குறித்தும் இன்று நாடெங்கிலும் பலரும் வியந்து கிடக்கிறார்கள்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி குறித்தும் அதனை நடத்தும் நிர்வாகம் குறித்தும் நாம் ஏற்கனவே இரண்டு பதிவுகள் வெளியிட்டுள்ளோம்.

இந்த நூற்றாண்டின் மிக மோசமான இனப்படுகொலையைப் புரிந்த இலங்கை அரசின் கொலைக்கரங்களுடன் கை கோர்த்துக் கொண்டு அவர்களின் தலைநகரமான கொழும்புவில் கல்வி வணிகம் தொடங்கியதையும் அம்பலப்படுத்தி இருந்தோம்.

நமது பதிவிற்கு தினத்தந்தியில் ஒரு கால் பக்க மறுப்பு வெளியிட்டு ஒப்பேற்றி இருந்தது புதிய தலைமுறை நிர்வாகம்.

எஸ்.ஆர்.எம்.நிறுவனத்தின்  பண வெறி தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களை நன்கொடை,கட்டணம்,அபராதம் என கசக்கிப் பிழிந்தது போதாது என்று இலங்கையில் கல்வி நிறுவனங்கள் துவங்கியது வரைக்கும் நீண்டது என்றால் அதன் அதிகார வெறியின் விளைவாக உருவெடுத்தது தான் காட்சி ஊடகம்.

தனது கல்வி நிறுவனங்களின் மூலம் அடிக்கும் கொள்ளையில் அன்பாகவும் அடாவடியாகவும் பங்கும் வழிப்பறியும் செய்யும் அரசியல் கட்சிகள்,அரசியல் தரகர்கள்,அதிகார மையங்கள்,சாதிக் கட்சிகள் போன்றவற்றில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இந்திய ஜனநாயகக் கட்சி என்னும் சாதிக் கட்சி முகமூடி மட்டும் போதாது மிகப்பெரிய செல்வாக்கு நமக்கு வேண்டும் என்னும் தொலை நோக்குத் திட்டத்தில் ஒன்றாய் உதித்தது தான் ஊடகத் துறையில் கால் பதிக்கும் அதன் முடிவு.

அதனை நோக்கிய பயணத்தின் முதல் அடி தான் புதிய தலைமுறை வார இதழ். அடுத்ததாக இப்பொழுது புதிய தலைமுறை தொலைக்காட்சி.

அதன் தொடர்ச்சியாக ஆங்கில தொலைக்காட்சி,தமிழில் பொழுதுபோக்கு ஊடகம்,தமிழ் நாளிதழ்,பதிப்பகம் என அதன் கரங்கள் இனிவரும் காலங்களில் நம்மை ஆக்டோபசாய்ச் சுற்றுவதில் இருந்து நாம் எப்படியும் தப்ப வாய்ப்பில்லை.

புதிய தலைமுறை உரிமையாளர் பச்சமுத்து என்ற பாரிவேந்தரின் 2014 ஆம் ஆண்டு செயல் திட்டம் என்னவென்றால் மாணவர்களைச் சுரண்டிச் சம்பாதித்த பணம் மற்றும் அதன் மூலம் உருவாக்கிய ஊடக செல்வாக்கைக் காட்டி வரும் நாடாளுமன்ற‌த் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு நாடாளுமன்ற‌ உறுப்பினராக வெல்வது.

அந்தக் கனவு நிறைவேறாத  பட்சத்தில் அவர்கள் உதவியுடன் ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவது.

பத்தாண்டு செயல்திட்டம் என்பது அரசியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுவது.சன் குழுமத்தைப் போல் நிறுவனத்தையும்  வளர்த்தெடுப்பது அந்த இலக்கு நோக்கிய பயணத்திட்டத்தில் தான் இன்று அவரது ஊடகத்தை வளர்த்து வருகிறார்.இந்த பின்னணியிலும் விழிப்புணர்வுடனும் தான் நாம் புதிய தலைமுறை குழுமத்தை அணுக வேண்டும்.




உண்மை உடனுக்குடன் என்னும் பிம்பத்துடன் செயல்படும்  புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புரட்டையும் உண்மையைத் திரித்து மோசடியாகச் செய்தவற்றையும் பார்ப்போம்.

கடந்த மார்ச் 27,2003 இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான நேர்படப் பேசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், புதிய தலைமுறை தொலைக்காட்சி,தீவிரவாத அமைப்புகளின் துணையோடு மாணவர் போராட்டத்தைத் தூண்டுவதாகவும், இதன் விளைவாக சிபிஐ சோதனை போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று மிரட்டினார் என்றும் ஆனால் புதிய தலைமுறை யாருக்கும் அஞ்சாது என்றும் எத்தகைய சவால்களையும் சந்திக்கும் என்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில், புதிய தலைமுறை இணைய பக்கத்திலும், முகநூலிலும் செய்தியையும் வீடியோவையும் ஒளிபரப்பினார்கள்.

இதன் வாசகங்கள் இது தான்.


இதனைப் பார்த்தால் புதிய தலைமுறை தொலைக்காட்சி நடுநிலை தவறாமல் செய்தி வெளியிட்டமைக்காய் கடும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருவது போலவும்,ஆனால் அதற்காய் அஞ்சப் போவதில்லை என்றும் வசன நடையில் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கிறது.

இதனைப் பார்த்ததும் படித்ததும் அறிவுசார் வட்டத்தினரும் இணையத்தில் உலவுபவர்களும் கருத்துரிமைக்கு சவாலா..?என்று கொதிக்கிறார்கள்.காங்கிரஸ் சம்பந்தப்பட்டது என்பதால் அதன் வேகமும் அதிகமாக‌ காணப்படுகிறது.

ஆனால் நமக்கோ விஜயகாந்த் நடிக்கும் திரைப்படத்தில் லியாகத் அலிகான் வசனம் கேட்டது போல் உச்சந்தலை முதல் உள்ளங்கை வரை ஜிவுஜிவு என்று இருக்கிறது.
இனி உண்மையில் புதிய தலைமுறை சொல்லியது போல் சம்பவம் நடைபெற்றதா என்று பார்ப்போம்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி மறு நாள் வெளியிட்ட வீடியோ.



http://puthiyathalaimurai.tv/video-gallery?video=2035


இந்த வீடியோ மிகவும் தந்திரத்துடனும் குயுக்தியுடனும் எடிட் செய்யப்பட்ட வீடியோ. நடைபெற்ற சம்பவங்கள் முழுமையாகவும் கோர்வையாகவும் இல்லை.அவர்களுக்குத் தோதாக இருக்கிறது.

//உங்களுக்காக புதிய தலைமுறை எத்தகைய சவால்களை எதிர்கொள்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக 27-03-2013 அன்றைய நேர்படப்பேசு நிகழ்ச்சி அமைந்தது.

தீவிரவாத அமைப்புகளின் துணையோடு மாணவர் போராட்டத்தைத் தூண்டுவதாகவும், இதன் விளைவாக சிபிஐ சோதனை போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான திரு. ஈ வி கே எஸ் இளங்கோவன், நமது அரங்கத்திலேயே, புதிய தலைமுறை குழுமத்திற்கு அச்சுறுத்தல்விடுத்தார்.//

இவர்கள் சொன்னதன் தொடர்பாக வீடியோக் காட்சிகள் இதில் இல்லை.

தீவிரவாத அமைப்புக்களின் துணையுடன் புதிய தலைமுறை மாணவர் போராட்டத்தை தூண்டுகிறது விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் தொலைக்காட்சியில் காணப்படுகிறது என்று இளங்கோவன் குற்றச்சாட்டு தெளிவாக வருகிறது.உடனே நெறியாளர் குணசேகரன் அதனைத் தொலைக்காட்சி சார்பில் மறுக்கிறார்.அதன்பின் வீடியோவில் பதிவான காட்சிகள் நிறுத்தப்பட்டு விடுகிறது.

இதன் விளைவாக புதிய தலைமுறை சிபிஐ சோதனையை எதிர்கொள்ள நேரிட வேண்டும் என்ற இளங்கோவனின் மிரட்டல் இதில் இல்லை..நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு முடிந்து அனைவரும் எழும் பொழுது  இளங்கோவன் சிபிஐ குறித்துப் பேசியதை மீண்டும் இணைத்துள்ளார்கள்.பார்ப்பவர்கள் இளங்கோவன் மிரட்டுகிறார் என்று உணர்ந்து கொள்ளும் படி காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.காங்கிரஸ் கட்சிக்கு இணையத்திலும் பொதுவெளியிலும் உள்ள எதிர்ப்புணர்வு அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வது போல இருக்கிறது..

ஆனால் உண்மையில் நடந்தது அது அல்ல.இது தான் உண்மையில் நடந்தது.





இளங்கோவன் மாணவர் போராட்டத்தை புதிய தலைமுறை தூண்டி விடுகிறது என்று சொல்கிறார்.புதிய தலைமுறையில் விடுதலைப்புலிகளின் ஆதரவு நபர்களின் ஆதிக்கம் இருக்கிறது என்று சொல்கிறார்.நெறியாளர் மறுக்கிறார்.

(குணசேகரன் சார் நிகழ்ச்சியை எப்பவும் நல்லா பண்றீங்க.பாராட்டுக்கள்..)

ஆனால் அடுத்து இளங்கோவன் சொன்னது,

//மாணவியிடம் 45 லட்சம் நன்கொடை பெற்று உங்கள் முதலாளி மோசடி வழக்கில் சிக்கியிருக்கின்றாரே,,>அது தொடர்பில் சிபிஐ விசாரணை நடக்கிறதே அதற்கு என்ன சொல்கின்றீர்கள் என்று கேட்கிறார்.//

இது புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்ட புரட்சிமுகம் காட்டும் வீடியோவில் இல்லை.

விடுதலைப்புலிகளை ஆதரித்துச் செய்தி வெளியிட்டமைக்கு சிபிஐ ரெய்டு வரும் என்று இளங்கோவன் கூறியதாக இந்த வீடியோவில் பதிவாக வில்லை.

உடனே குணசேகரன் ஒரு பதிலைச் சொல்லுகிறார்.உடனே நிகழ்ச்சி முடிவடையாமல் நிறுத்தப்பட்டு விடுகிறது.இது தான் நடந்தது.

இளங்கோவன் பழுத்த காங்கிரஸ்வாதியல்லவா.,எங்கு அடித்தால் எங்கு வலிக்கும் என்று நன்கு தெரிந்தவரல்லவா..! அதைச் சரியாகச் செய்கிறார்.

ஆனால் புதிய தலைமுறையோ தனது முதலாளி மீதான மோசடிக் குற்றச்சாட்டு குறித்தும் அது சிபிஐ விசாரணையில் இருப்பது குறித்தும் எவ்விதக் கருத்தினையும் தெரிவிக்காமல் இளங்கோவன் தொடர்புடைய உரையாடலை வெட்டியும் ஒட்டியும் தனது நடுநிலைத் தன்மைக்கும் உண்மைத்தன்மைக்கும் காங்கிரஸ் சவால் விடுகிறது.மிரட்டுகிறது,ஆனால் அஞ்சப் போவதில்லை என சவடால் அடிக்கிறது.

(இந்த நிகழ்ச்சி நடந்தவுடன்  காங்கிரஸ் எதிர்ப்புச் செய்தியை கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசிங்க என்று நிர்வாகத்திலிருந்து உத்தரவு வந்தது தொடர்பற்ற செய்தி)

மத்தியில் இவ்வளவு காலம் ஆட்சியில் இருக்கும் தனது கட்சியிடமும்,அதில் ஆதிக்கம் செலுத்திய அமைச்சர்களிடமும்,அதிகார பீடங்களிடமும்  மருத்துவம்,பொறியியல்,கலை,நர்சிங் என எண்ணற்ற கல்லூரிகளுக்கு அங்கீகாரமும் அனுமதியும் பெற கொடுக்க வேண்டியதைக் கொடுத்தாலும், யாசித்தும்  நின்ற ஒருவர்,அதன் மூலம் முறையற்றுப் பல்லாயிரம் கோடிகளை அறுவடை செய்த பணத்தில் ஆரம்பித்த ஊடகத்தில் தன்னையும் தன் கட்சியையும் குற்றம் சாட்டுவதை,அது வெளியிட்ட செய்திகளின் மூலம் நெருக்கடிக்கு உள்ளாவதை இளங்கோவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

காங்கிரஸ் கட்சியின் மீதும்,தனது  மீதும் குற்றம் சாட்டியவுடன், ஆத்திரப்பட்டு ,என் மீது குற்றம் சாட்டுகிறாயே,உன் முதலாளி யோக்கியமா,,?மோசடிப் பேர்வழி தானே அதற்கு சிபிஐ விசாரணை இருக்கிறதே என்று கொதிக்கிறார்.

இதில் இளங்கோவனின் திமிர்த்தனம் அம்பலப்படுத்தப்பட்டது.

ஆனால்  புதிய தலைமுறையோ மோசடி முகத்தை புதியதாக கிடைத்த முற்போக்கு அரிதாரம் மூலம் மறைக்கப் பார்க்கிறது.நடுநிலை,உண்மைத்தன்மை,யாருக்கும் அஞ்சாமை என பிதற்றுகிறது.



Add caption


ஜூனியர் விகடனில்

(சன் நியூஸ் தொலைக்காட்சியின் ஆசிரியர் ராஜா பாலியல் புகாரில் கைதுசெய்யப்பட்ட பொழுது அது குறித்து ஒரு வரிச் செய்தி கூட எழுதாத துப்புக்கெட்ட ஜுவி.,
சன் நியூஸ் தொலைக்காட்சியின் போட்டி ஊடகமான புதிய தலைமுறை முதலாளி சிபிஐ விசாரணைக்கு ஆஜரானதை இரண்டு பக்கம் துப்புத் துலக்குகிறது.

 இந்த துப்புக் கெட்டத் தனத்திற்கு தமிழர்களின் நாடித் துடிப்பு என்பதற்குப் பதில் மாறனின் நாடித்துடிப்பு என்று பெயரிட்டு ஜூனியர் விகடனை வெளியிடலாம்.)

இந்த நிகழ்ச்சியை இப்படிப் பொருத்திப் பார்ப்பது தான் சரி.

ரெகுலராக காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரில் இருந்து கடைநிலை கான்ஸ்டபிள் வரைக்கும்   மாமூல் கொடுத்தும் கூழைக் கும்பிடு போட்டும் தனது பிழைப்பை நடத்தும் ரவுடி அல்லது பிக் பாக்கெட், திருடன் ஒருவன், தனக்கு புதியதாக கிட்டிய அரசியல் கட்சித் தொடர்பு,சாதித் தலைவர் நட்பு,ரியல் எஸ்டேட் பணம் ஆகியவற்றின் கிடைத்த புதுச் செல்வாக்கு காரணமாய் ஏரியாவில் போலீஸ்காரர் உட்பட யாரையும் மதிக்காமல் மிடுக்குடன் தெனாவட்டாய் வருவான்.

இதைக் கண்டு ஆத்திரமுற்ற போலீஸ் காரர் நேத்து வரைக்கும் கூழைக்கும்பிடு போட்டுக் கிட்டிருந்த பய,அய்யாட்ட சொல்லி நம்ம மேல கை வைக்காம பார்த்துக்கோங்க என்று கெஞ்சிக் கிட்டிருந்தவன் இன்னைக்குத் தெனாவட்டுக் காட்டுறானே என்று மனதில் பொருமிக் கொண்டே இருப்பார் ஏதாவது ஒரு சிறு பஞ்சாயத்தில் வசமாக மாட்டும் பொழுது.ஏண்டா ஒழுங்கா இருக்கியா,இல்லை பழைய கேசைத் தூசி தட்டவா என்று மிரட்டுகிறாரே..? வசமாக மாட்டிக் கொண்ட பிக் பாக்கெட்டும் காரியவாதத்துடன் கொஞ்ச நாள் 'அமைதியாக' இருப்பான்.அதைப் போலத் தான் இங்கும் நடந்திருக்கிறது.

இளங்கோவன் பக்கா காங்கிரஸ் அரசியல்வாதி.அது மட்டுமல்ல நிகழ்ச்சி நடந்தது இரவு நேரமும் கூட.'நிதானமின்றி' 'நிலை தடுமாறி'  இருந்திருக்கவும் நிச்சயம் வாய்ப்பு உண்டு.நிகழ்ச்சி முடிந்தவுடன் தொலைபேசியில் முதலாளிக்கு போன் போட்டுச் 'செல்லமாய்ச்' சொல்ல வேண்டியதை பொறுக்க மாட்டாமல் 'மதி மயங்கி' தனது ஆத்திரத்தை வெளிப்படையாய் காட்டி விட்டார்.

ஆனால் புதிய தலைமுறையோ தனது முதலாளியின் மோசடி பகிரங்கமாக‌ அம்பலப்படுத்தப்பட்டதை மறைத்து விடுதலைப்புலிகளின் ஆதரவினால் தான் சிபிஐ ரெய்டு என்று புரட்சி முகம் காட்டுகிறது.நடுநிலை ஆதரவு வாக்குகளை   அனைவரின் துணையுடனும் அமோகமாய் அறுவடை செய்கிறது.இத்தனை களேபரத்தில் புதிய தலைமுறையை ஆதரித்தவர்கள் யாரும்,அதே சமயத்தில் பச்சமுத்து வாங்கிய 45 லட்சம் நன்கொடையை  சொல்லி வைத்தாற் போல் மறந்தும் விமர்சிக்கவில்லை என்பது அவலம்.

அன்றைய நேர்படப் பேசு நிகழ்ச்சியில் (உண்மையில் )நடந்தது என்ன என்று அதில் கலந்து கொண்ட ஞாநியும் பதிவு செய்துள்ளார்.




ஆனால் புதிய தலைமுறையோ உண்மையைத் திரித்து வீடியோ வெளியிடுகிறது.அது வெளியிட்ட மாதாந்திர காணொளித் தொகுப்பில் இந்த பிரச்சனையை அப்படியே நீக்கி விட்டு வெளியிட்டுள்ளார்கள்.

முறையற்ற கல்வி வணிகத்தில்  கிட்டிய பல்லாயிரம் கோடியைப் பாதுகாக்கும், தக்க வைக்கும் அதிகாரத்தை உருவாக்கும் நோக்கத்தில் எழுப்பப்பட்டது தான் புதிய தலைமுறை.ஆகவே இந்த நிறுவனத்திற்கு அறம்,நடுநிலை போன்ற எதுவும் கிடையாது.அப்படிக் காணப்பட்டால் அது முகமூடியாகத் தான் இருக்கும். பிற நிறுவனங்களை ஒப்பிடும் பொழுது இதன் கயமைத் தனம் மிக அதிகமாகவும் இருக்கும்.

புதிய தலைமுறைக்கு மாணவர்களின் தன்னலமற்ற போராட்டத்தை ஒளிபரப்ப வேண்டும்,அதனை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிக்க வேண்டும், காங்கிரஸ் கட்சியைத் தனைமைப்படுத்த வேண்டும்,அம்பலப்படுத்த வேண்டும் என்ற கொள்கை கோட்பாடு ஒன்றும் கிடையாது.இன்றைய அவர்களின் வளர்ச்சிக்கும் பிழைப்புக்கும் அது பயன்படுகிறது.அதற்காய் அனைத்தையும் ஆதரிக்கிறார்கள்.ஒளிபரப்புகிறார்கள்.



ஈழத்தில் லட்சக்கணக்கில் தமிழர்கள் கொலை செய்யப்பட்டதற்கு பிரபாகரன் தான் காரணம் என்று சொல்லும் ஊரை அடித்து தன் உலையில் போட்ட  பச்சமுத்துவின் கூற்றையும் அதே கையோடு இலங்கை சென்று   கல்வி நிறுவனங்கள் தொடங்கியதையும்,இன்றோ அதே பச்சமுத்துவின் ஊடகம் நாடெங்கிலும் தனி ஈழக் கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தை முதல்வரிசையில் நின்று ஒளிபரப்புவதையும் ஒப்பிட்டு நோக்கினால் புதிய தலைமுறை பச்சமுத்துவின் செயல்பாட்டின் பின்னால் எவ்வளவு பிழைப்புவாதம் இருக்கிறது என்பதை அறியலாம்.

பண வெறியில் இலங்கையில் எஸ்.ஆர்.எம்.கல்வி நிறுவனங்கள்  துவங்கியது போல் நாளையே இலங்கையில் தொலைக்காட்சி தொடங்கினார்கள் என்றால் அங்குள்ள சிங்களர்களின் உரத்த குரலாக அது ஒலிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

மாறன் சகோதரர்கள் காவிரி பிரச்சனையிலும் அது தொடர்புடைய போராட்டங்களிலும் உண்மையைத் தங்களுக்கு ஏற்ற வகையில் சன் டிவியில் ஒரு தொனியிலும் உதயா டிவியில் ஒரு தொனியிலும் இயங்குகின்றார்கள் என்பதைப் பார்த்தவர்கள் தாம் நாம்.

புதிய தலைமுறை அவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல.இந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் அவர்களை அணுகுவது தான் சிறந்தது.

இல்லையென்றால் இன்னும் சிறிது காலத்தில் கே.டி.மாறன் சகோதரர்களிடம் நாம் கூட்டணி வைத்துக் கொண்டு இவர்களிடமிருந்து கருத்துரிமையைக் காக்க போராட‌ வேண்டிய அவலம் நடைபெற்றாலும் ஆச்சரியம் இல்லை.
.

Friday, 22 March 2013

தினகரன் ஆசிரியர் கணிப்பு பலித்தது -பொறுக்கியாய் ஜெயிலுக்குப் போன ராஜா..!



சன் டிவி நியூஸ் எடிட்டர் ராஜா குறித்து 2012 மார்ச் 18 ஆம் தேதியிட்ட பதிவில் நாம், 20 வருடத்திற்கு முந்தைய ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டி இருந்தோம்.

20 வருடங்களுக்கு முன் தினகரன் ஆசிரியர் கேசவன் ராஜாவைச் சரியாக கணித்து திட்டியது தான் அது.

அந்தப் பதிவில் இருந்து சில பகுதிகள்.

இப்பொழுது சூரியத் தொலைக்காட்சியில் கோலோச்சும் வெறுங்குடம் ராசா அப்பொழுது முரசொலியில் பிழை திருத்துநராக வேலையில் இருந்தார்.இவரது ஆரம்ப கட்டத்திற்கு அடுத்த கட்டம் தான் இந்த வேலை.அடுத்த கட்டம் இப்படியென்றால் முதல் கட்டத்தில் என்ன வேலை செய்தார் என்று அதிகப்பிரசங்கித்தனமாகக் கேட்கப்பிடாது.

அப்பொழுது முரசொலிமாறன் தமிழன் என்றொரு வாரப் பத்திரிகையை ஆரம்பிக்க முடிவு செய்து அதற்கான வேலையை முழுமூச்சாகச் செய்ய ஒரு குழுவை இறக்கி விட்டிருந்தார்.முரசொலி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக அலுவலகத்தில் இந்தப் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருந்தன.அதற்குப் பொறுப்பாசிரியர் கேசவன் என்பவர்.இவர் யாரென்றால் பழைய தினகரனின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.கொஞ்சம் நல்ல மனுஷரும் கூட.

ஆனால் இவருக்கு கொஞ்சூண்டு வெளியே தெரியாத பந்தா குணமும் உண்டு.தமிழன் இதழ் அலுவலகத்தில் இவருக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டுக் கொஞ்சம் செல்வாக்குடன் இருந்தார்.பத்திரிகை விரைவில் வெளிவர இருந்த சமயம் அது.

கேசவன் தன்னுடன் பணியாற்றிய நிறையப்பேரைத் தொலைபேசியில் அழைத்து முரசொலி அலுவலகத்திற்கு வாங்க!.பாத்து ரொம்ப நாளாச்சு.பேசுவோம் என்று அழைப்பு அனுப்பினார்.நிறையப்பேர் அவர் அழைப்பிற்கு இணங்க சந்திக்க வந்தாலும் சிலர் மட்டும் என்னத்த...இதுக்கு இவர் தினகரனில் வேலை பார்த்திருக்கலாம்.இந்த வளாகத்தில் இருந்து வர்ற தமிழன் எப்படி உருப்பட முடியும் என்று புலம்பியது தனிக்கதை.(கடைசி வரை தமிழன் உருப்படவில்லை என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை)

அந்த சமயத்தில் ஒருநாள் வந்தவர் தான் சண்முகசுந்தரம் என்பவர்.இவர் தினகரனில் வேலை செய்து கொண்டிருந்தவர்.அவருடன் கேசவன் நாட்டு நடப்பு,தினகரன் நடப்பு என்று பேசிக் கொண்டிருந்தார்.அப்பொழுது திடீரென்று தூரத்தில் இருந்த ஒருவரை நோக்கிக் கடுமையாகச் சத்தம் போட ஆரம்பித்தார்.

ஏய்..இங்க வா..நான் உன்னைய என்ன சொன்னேன்?ஆனா நீ அங்க என்ன பண்ணிக்கிட்ருக்க.. இந்த மேட்டர் முழுவதும் தப்புத்தப்பா இருக்கு.அத ஒழுங்காப் பாருன்னா,நீ என்னடான்னா வண்ணத்திரையில நடுப்பக்கத்தை விரிச்சு நடிகையைப் பார்த்து ஜொள்ளு விட்டுக்கிட்ருக்க.இதுக்கா உனக்கு இங்க சம்பளம் தர்றாங்க...இது சரிப்படாது.இப்படி இருந்தா இந்த பீல்டுல குப்ப கொட்ட முடியாது பாத்துக்க..போய் ஒழுங்கா வேலையப் பாரு.இல்ல வீட்டுக்கு அனுப்பிடுவாங்க என்று எச்சரித்து அனுப்பினார்.

வண்ணத்திரையின் நடுப்பக்கம் பார்த்த மவராசனும் தலையைக் குனிந்து கொண்டு இடத்தைக் காலி செய்தார்.


--இது தான் ஒரு வருடத்திற்கு முந்தைய‌ நமது 2012 மார்ச் 18 ஆம் தேதியிட்ட நமது பதிவு.

”இப்படி இருந்தா இந்த பீல்டுல குப்பை கொட்ட முடியாது.வீட்டுக்கு அனுப்பிடுவாங்க ” என்று அன்று எச்சரிக்கப் பட்ட மவராஜா  இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஆம்.சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா,தன் கீழ் பணியாற்றிய பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கு முன் ராஜாவின் லீலைகள் அனைவருக்கும் தெரிந்தாலும் முதன்முறையாய் ஒரு பெண் துணிச்சலாக புகார் அளித்து அவரைக் கைது செய்ய வைத்துள்ளார்.

துணிச்சல் மிக்க அகிலாவுக்குப் பாராட்டுக்கள்.

அன்று வேலை கற்றுக் கொள்ள வந்த இடத்தில் தினகரன் ஆசிரியர் கேசவன் சொன்னதை ஒழுங்காக கடைப்பிடித்திருந்தால் ராஜா இன்று உருப்பட்டிருக்கலாம்.

வீட்டுக்கு மட்டுமல்ல.ஜெயிலுக்கும் போக வேண்டியந்திருக்காது.



தொடர்புடைய இணைப்புக்கள்.











இச்செய்தியை மேற்கண்ட இதழ்களைத் தவிர பிற அனைத்து ஊடகங்களும் சொல்லி வைத்தாற் போல் கூட்டுக் களவாணித்தனமாய் பதிவு செய்யவில்லை.

வழக்கமாய் சன் நிறுவனத்திற்கு எதிரான செய்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் தினமல்ர் இந்த முறை அமைதி காத்துள்ள‌து.

மேற்கண்ட இதழ்கள் இதனைப் பதிவு செய்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது.தமிழக அரசியல் உரிமையாளர் சிறைச்சாலைக்குச் சென்ற பொழுது சன் நியூஸ் தொலைக்காட்சி பதிவு செய்தது.குமுதம் நிறுவனத்தை அபகரித்த எபிசோடில் வரதராஜனுக்கு எதிராய் சன் நியூஸ் செய்தி வெளியிட்டது.

அது தான் இவர்கள் செய்தி வெளியிட்டதற்கு காரணம்.

Sunday, 10 March 2013

'தமிழ்நாட்டு அருந்ததிராயின் போர்க்குரல்'...!


கவின்மலர் 


கவின்மலர் என்னும் பத்திரிகையாளர் முகநூலில் இத்துறை குறித்து எழுதிய 3 நிலைச் செய்திகள் சரியா என்பதை விவாதிப்பதே இந்தப்பதிவு.

முதலில் வினவு இணையதளத்தில் வெளிவந்த ஒரு கட்டுரையைப் படித்து விடுங்கள்.

http://www.vinavu.com/2013/01/23/who-will-punish-vikatan/

இக்கட்டுரையை விட அதில் வெளிவந்த குறித்த பகுதி தான் க.மலரை பொங்கி எழச் செய்துள்ளது.

"ஊருக்கு உபதேசம் சொல்லும் கவின்மலர், அவருடன் இணைந்து பணியாற்றி டைம்பாஸ் என்ற மலிவான ‘மெல்லிய’ போர்னோ பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்கும் ரீ.சிவக்குமாரின் (சுகுணா திவாகர்) சட்டையைப் பிடித்து பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் இரண்டு கேள்விகளாவது கேட்கத் தயாரா? இல்லை இவரை ஆசிரியர் பொறுப்பில் விட்டு காசு பார்க்கும் விகடன் நிர்வாகத்தினை கண்டித்து ஒரு மொக்கை கவிதையாவது எழுதத் தயாரா? முடியாது எனில் யாரை ஏமாற்றுகிறீர்கள்?"

ஊருக்கே வகுப்பெடுக்கும் பத்திரிகை ஆளுமை நாம், முகநூலில் ’கருத்து காயத்ரி’ சின்மயிக்கு நிகராக நிறையப்பேர் நம்மை பாலோ செய்கிறார்கள்.

இது தவிர தமிழ்நாட்டில் முற்போக்கு வட்டாரத்தில்,சுற்றுச்சூழலில் இருந்து, கல்வி,இசை,நாட்டியம்,கவிதை தொடங்கி ஆவணப்படம் வரைக்கும் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், நிகழ்ச்சியின் மையப்பொருள் குறித்தும், அத்துறை குறித்த அறிவும் தெளிவும் நம்மிடம் இருக்கிறதா என்று கூட யோசிக்காமல், அதில் கலந்து கொள்வதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முதலில் நம்மிடம் தான் டேட் கேட்கிறார்கள். அதன் பிறகு தான் அரங்கு புக் செய்கிறார்கள்.அப்படிப்பட்ட நம்மிடவேவா..?

எப்படியாவது ஆடி போய் ஆவணி வருவதற்குள் 'தமிழ்நாட்டு அருந்ததி ராயாக' ஆகியே தீருவது என்னும் ஒற்றை லட்சியத்துடன் திட்டமிட்டுத் தீயாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

('தமிழ்நாட்டு அருந்ததி ராய்' என்று இவரை முதன் முதலில் அழைத்த பெருமை நமக்கு உடையது அல்ல.அவர் வேலை பார்த்த நிறுவனம் ஒன்றில் அளிக்கப்பட்டது.)

அப்படி இருக்கையில இவர்கள் யார் நம்மை விமர்சிக்க என்னும் கடுப்புடன், கேள்வி கேட்டது வினவு இணையதளம் என்பதால் தன் ரத்தத்தில் இயல்பிலேயே ஊறி இருக்கும் சிபிஎம் உணர்வுடன் கொதித்தெழுந்து விட்டார்.

அதன் விளைவு தான் முகநூலில் கீழ்க்கண்ட இந்த நிலைச் செய்தி.சனவரி 23 ஆம் தேதியிட்ட கட்டுரைக்கு சனவரி 30 ஆம் தேதி எதிர்வினை அளித்துள்ளார்.

முதல் பதிவு.

//எதற்கெடுத்தாலும் நீ வேலை பார்க்கும் நிறுவனம் மட்டும் யோக்கியமா என்று கேட்கும் அறிவுக்கொழுந்துகளுக்கு..! அரசாங்க வேலையில் இருக்கும் ஒருவரைப் பார்த்து…நீ வேலை செய்யும் அரசாங்கம் யோக்கியமா என்று கேட்கும் அபத்தத்தை ஒத்தது இது. ஒரு அரசு ஊழியரைப் பார்த்து அரசின் அத்தனை தவறுகளுக்கும் பொறுப்பேற்கச் சொல்லும் முட்டாள்தனத்துக்கு ஒப்பானது. ஊடகத்தின் தன்மையை உணர்ந்தவர்கள் எவரும் இப்படியொரு அபத்தக் கேள்வியைக் கேட்க மாட்டார்கள்//

(இந்த நிலைச் செய்திக்கு ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்தோம்.ஆனால் எங்கோ தவறி விட்டது.விரைவில் அதனையும் பதிவு செய்கிறோம்.)

கவின்மலரின் இந்தக் கருத்துக்கு நிறையப்பேர் வழக்கம் போல் லைக் செய்திருக்கிறார்கள்.அதில் ஊடகம் குறித்து அறியாதவர்கள் தான் அதிகம்.இவர்களைத் தவிர எல்லாம் தெரிந்த சில பத்திரிகையாளர்களும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

இதன் மூலம் கவின்மலர் சொல்ல வருவது என்னவென்றால்,

அவர்கள் எழுதிய கட்டுரை,செய்திப்பதிவுக்கு மட்டுமே பத்திரிகையாளர்கள் பொறுப்பு. பிற உள்ளடக்கங்களுக்கு தாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்..?

தாங்கள் வேலை பார்க்கும் பத்திரிகை நிறுவனத்தின் யோக்கியத்தன்மை குறித்து அதில் வேலை பார்க்கும் பத்திரிகையாளர்களிடம் கேட்கக்கூடாது.

அரசாங்கத்தின் அனைத்து தவறுகளுக்கும் அதன் ஒட்டுமொத்த ஊழியர்களும் எப்படிப் பொறுப்பாக மாட்டார்களோ அதைப்போல பத்திரிகை நிறுவனத்தின் தவறுகளுக்கு அதன் ஊழியர்கள் பொறுப்பாக மாட்டார்கள்.

இனி அவரது கருத்தும் ஒப்பீடும் சரியா என்று பார்ப்போம்.

அடிப்படை அரசியல் தெரிந்த எவரும் அரசாங்கத்தின் அனைத்து தவறுகளுக்கும் அதன் ஊழியர்களைப் பொறுப்பாக்க மாட்டார்கள்.அரசாங்கத்தின் தவறுகளுக்கு அதன் அதிகார வர்க்கத்தையும் ஆட்சியாளர்களையும் அவர்கள் வகுக்கும் கொள்கைகளையும்,அதன் அமைப்பையும்  தான் குறை சொல்வார்களே தவிர ஊழியர்கள் மீது பழி சுமத்த மாட்டார்கள்.

அதே சமயம் ஊழியர்கள் அவர்கள் பொறுப்பில் செய்யும் தவறுகளுக்குத் தான் அவர்களைக் குறை சொல்வார்கள்.

அதைப்போல உண்மையான அரசு ஊழியர்கள்,என்ன செய்வார்கள் தெரியுமா..?

தன்னளவில் நேர்மையாய் இருப்பார்கள்.அதே சமயம் தன் மேலதிகாரியில் இருந்து அரசின் உயர்மட்டம் வரை யார் தவறு செய்தாலும் அதனை எதிர்த்துப் போராடுவார்கள்.

அரசின் ஊழல்களை அதன் அதிகார துஷ்பிரயோகத்தை அதன் முறைகேட்டை அதன் தவறான கொள்கைகளை,சமூகத்திற்கு எதிரானவற்றை தொடர்ந்து தட்டிக் கேட்பார்கள்,ஒத்த கருத்துடைய இதர சங்கங்கள் மற்றும் பொதுமக்களையும் தங்களுடன் இணைத்து போராடுவார்கள்.

ஊழலில் இருந்து தனியார்மயமாக்கம் வரை நாட்டில் அனைத்து ஊழியர் சங்கங்களும் இதைத் தான் செய்கின்றன.

இதை தான் வினவு உங்களிடம் கேட்டது.

பெண் உரிமை,பெண்ணியம்,ஆண் பெண் பாகுபாடு என சம்பந்தம் இல்லாமல் தர்மபுரி கலவரத்துக்கு   புரட்சிகரக் கட்டுரை எழுதியிருக்கின்றீர்களே,அறச்சீற்றம் கொண்டிருக்கின்றீர்களே ஏன் கொஞ்சம் உங்கள் கடைக்கன் பார்வையைத் திசை திருப்பி இத்தனை பிரச்சனைகளுக்கும் நாற்றங்காலாய் ஆபாசம்+அருவருப்பு+வக்கிரம் என அனைத்தும் கலந்த கலவையாய் பத்திரிகை நடத்தும் விகடன் நிறுவனத்தின் டைம்பாஸ் இதழைக் கண்டிக்க கூடாது என்று தான் கேட்டது..?

கண்டிக்கும் அளவுக்கு நீங்கள் ஒர்த் இல்லை என்று தெரிந்ததாலோ என்னவோ வழக்கமாக எழுதுவது போல் ஒரு மொக்கை கவிதையையாவது எழுதக் கூடாது என்று தான் சரியாக வினவியது.விகடனின் டைம்பாஸ் இதழில் வெளிவந்த கழிசடைத்தனத்துக்கு கவின்மலரைப் பொறுப்பேற்கச் சொல்லவில்லை.

இன்னும் சொல்லப்போனால் போர்க்குணமிக்க அரசு ஊழியர்கள் அரசின் தவறுகளுக்கு எதிராய் எப்படிப் பொங்கி எழுகிறார்களோ அந்த அளவுக்கு கூட விகடன் நிறுவனத்திற்கு எதிராகப் பொங்க வேண்டாம்,போராட்டம் நடத்திடக் கூட வேண்டாம்.குறைந்தபட்சம் ஒரு மொக்கை கவிதை எழுதியாவது எதிர்ப்பைத் தெரிவிக்கலாமே என்று தான் கேட்டது.எந்த விதத்திலும் டைம்பாஸ்  வக்கிரத்திற்கு கவின்மலரைப் பொறுப்பாக்கவோ குற்றம் சாட்டவோ இல்லை.

ஆனால் கவின்மலர் லாவகமாக வார்த்தைகளில் கயிறு திரிக்கிறார்.அவர்கள் சொல்லாத ஒன்றை இவராக வலிந்து திணிக்கிறார்.

வேலை பார்க்கும் பத்திரிகை நிறுவனத்தின் கருத்துக்களுக்குப் பொறுப்பேற்கச் சொல்கிறார்கள்.இது அரசின் தவறுகளுக்கு அதன் ஊழியர்களைப் பொறுப்பேற்கச் சொல்வதைப் போன்றது என்று இவராக,இவருக்குச் சாதகமான,அபத்தமான ஒரு ஒப்பீட்டை தெரிந்தே திட்டமிட்டே உருவாக்குகிறார்.சம்பந்தம் இல்லாமல் கயிறு திரிக்கிறார்.

முட்டாள்தனம் வினவுத் தளத்திடம் இல்லை.கவின்மலரிடம் தான் இருக்கிறது.சிபிஎம் மில் பாடம் பயின்றவர் அல்லவா..இவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்..?


கவின்மலர் பேசும் நிகழ்ச்சி ஒன்றில் ரங்கராஜன் எம்.பி.


இனி அவரது நிலைச் செய்தியிலேயே இன்னொன்றும் இருக்கிறது.

//ஊடகத்தின் தன்மையை உணர்ந்தவர்கள் எவரும் இப்படியொரு அபத்தக் கேள்வியைக் கேட்க மாட்டார்கள்.//

வினவு தளத்துக்கு ஊடகத்தின் தன்மை குறித்து ஒன்றும் தெரியாது என்று சொல்கிறார்.
வினவு தளத்தின் அரசியலில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம்.அதனை விவாதிக்கவும் எதிர்த்து வாதம் செய்யவும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது.

ஆனால் வினவு தளத்தை நடத்துபவர்கள் பத்திரிகை துறையின் தன்மை அறியாதவர்கள் என்று போகிற போக்கில் சேற்றை வாரி இறைக்கும் தவறை ஆர்.எஸ்.எஸ்.காரன் கூட அவ்வளவு ஏன் படித்த சி.பி.எம். காரன் கூட செய்ய மாட்டான்.

கவின்மலருக்கு வயது தோராயமாய் 40 இருக்கும். ஆனால் கவின்மலரின் ஒட்டுமொத்த பத்திரிகை உலக அனுபவமும் புதிய தலைமுறையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்ததில் இருந்து இந்தியா டுடேவில் சேர்ந்தது வரை  3 ஆண்டுகள் தான்.

ஊடகத்தின் தன்மை அறியாதவர்கள் என்று கவின்மலர் சொல்லும் வினவு இணையதளத்தை நடத்துபவர்கள் அவர்களுக்கான ஊடகத்தை நடத்த ஆரம்பிக்கும் பொழுது கவின்மலர் ஓரத்த நாடு ஆரம்ப பள்ளிக்கூடத்தில் சிலேட்டில் ஆசிரியை கைபிடித்து அ னா ஆவன்னா என்று எழுத ஆரம்பித்திருப்பார்.

ஆனால் இந்த லட்சணத்தில் கவின்மலர் ஊடகத்தின் தன்மை குறித்து வினவு தளத்துக்கு வகுப்பெடுக்கிறார்.

சரி கவின்மலர் இப்பொழுது அதிகமாய் ஊடகங்கள் குறித்தும் அதன் தவறான போக்குகள் குறித்தும் அதிகமாய்க் கவலைப்படுகிறாரே அதில் எள்ளளவும் நேர்மை இருக்கிறதா என்று பார்ப்போம்.

இது அவரது இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலைச் செய்திகள் பற்றிய விமர்சனம் இது.

கவின்மலரின் இந்த வாரக் கவலை + அறச்சீற்றம்.





இது கவின்மலர் குமுதம் ரிப்போர்ட்டர் குஷ்பு-கருணாநிதியைத் தொடர்புபடுத்தி எழுதியமைக்கு எதிராய் எழுதப்பட்ட நிலைச் செய்திகள்
.
இது மிக மிகச் சரியான கருத்து.குமுதம் ரிப்போர்ட்டரின் கேவலமான இதழியல் யுத்திக்கு இது சரியான எதிர்வினை.ஒரு நாம் கவின்மலரின் எழுத்தில் உடன்படுகிறோம்.

ஆனால் இதைச் சொல்வதற்கு கவின்மலருக்கு தகுதி இருக்கிறதா,,>.?

கவின்மலர் இதற்கு முன் வேலை பார்த்தது ஆனந்த விகடனில்.இப்பொழுது வேலை பார்ப்பது இந்தியா டுடேவில்.

குமுதம் ரிப்போர்ட்டர் இதழைப் போல் ஆனந்த விகடன் இதுவரை எதையுமே எழுதியதில்லையா..? அப்பொழுது கவின்மலர் எங்கே போனார்..?


நயன்தாரா யாருக்கு என்று 9-சனவரி-2013 இதழில் அட்டைப்படம் வைத்ததே..?


நயன்தாராவைப் பெண் என்றும் மனுஷி என்றும் பாராமல் அவரைப் பொது வெளியில் நிறுத்தி பொதுச் சொத்தாக்கி அதனை அண்ணனும் தம்பியும் ஏலம் போட வைப்பது போல் கேள்விகளைக் கேட்டுப் பதில்களை வாங்கி அதனை அட்டையில் மலினமான வியாபார யுக்தியாக வைத்து விற்றுத் தள்ளியதே..?

இந்தக் கட்டுரை பெண்களை வீடுகளுக்குள்ளூம் சுவற்றுகளுக்கும் அடைபட வைக்கும் வித்தை என்றும் இது தான் ஜர்னலிசமா என்றும்..? இந்தப்பிழைப்பு தேவையா என்றும்,பெண் என்பதாலேயே நயன்தாரா தாக்கப்படுகிறார் என்றும் ஏன் விகடனுக்கு எதிராய்  கொதித்தெழ வில்லை..?

அப்பொழுது கவின்மலர் எங்கே சென்றார்..?

எங்கும் செல்லவில்லை.ஆம்  நயன்தாரா யாருக்கு என்னும் ஏலம் வந்த பக்கத்துக்கு அடுத்த பக்கம் கவின்மலர் தர்மபுரி கலவரத்தை வைத்து அன்பானவர்களுக்கு ஒரு கடிதம் என்ற பெயரில் சமூகம் பெண்களை பாகுபாட்டுடன்,இழிவுடன் நடத்துகிறது,மாற வேண்டும் என்று நமக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.  

அப்பொழுது ஏன் இப்பொழுது குமுதம் ரிப்போர்ட்டரைத் திட்டுவது போல் திட்டவில்லை.இத்தனைக்கும் அந்த இதழ் வந்த சமயத்தில் விகடன் குழுமத்தில் இருந்து நிர்வாகத்தின் வேண்டுகோளின் படி ராஜினாமா கடிதத்தைக் கூட அளித்து விட்டார்.விகடன் குழுமத்தை விமர்சித்தாலோ,அதற்கு எதிராக மொக்கை கவிதை எழுதினாலோ வேலை போய் விடும் என்ற பயம் கூட கிடையாது.

குஷ்புவுக்கு ஒரு நியாயம்..? நயன் தாராவுக்கு ஒரு நியாயமா..? என்பதை விட விகடனுக்கு ஒரு நியாயம்.குமுதம் ரிப்போர்ட்டருக்கு ஒரு நியாயமா என்னும் கேள்வி தான் சரியாக இருக்கும்.

இது மட்டும் அல்ல..இன்னும் நிறையச் சொல்லலாம்.

தன்னை இஸ்லாமியத் தோழியாக காட்டிக் கொள்ளும் கவின்மலர்,ஊடகங்களில் இஸ்லாமியருக்கு எதிரான போக்கு அதிகரித்து விட்டதாய் ஏகத்துக்கும் வருத்தப்படும் கவின்மலர்,

அப்சல்குரு தூக்கிலிடப்பட்ட சமயம்,அப்சல்குரு குறித்து ஜூனியர் விகடனில் சிறப்புச் செய்தியாளர் ஆர்.பி.என்னும் புனைப்பெயரில் ஒளிந்து கொண்டு விஷம் கக்கிய பொழுது எழுதிய பொழுது அதனை எதிர்த்து கனத்த மவுனம் தானே காத்தார்.முகநூலில் நிலைச் செய்தி கூட்ப் போடவில்லை.அவ்வளவு ஏன்..?குறைந்த பட்சம் அலுவலக வாசலில் உள்ள ராமச்சந்திரன் டீக்கடையில் கூடப் புலம்பவில்லையே..?

ஒவ்வொரு டைம்பாஸ் இதழ்களுக்கும் எதிராகத் தனி இயக்கமே கவின் மலர் தலைமை ஏற்று நடத்தலாமே..?

சரி பழைய கதையை விடுவோம்.இப்பொழுது வேலை பார்க்கும் இந்தியா டுடே இதழானது டைம்பாஸுக்கு முன்னோடியாக மாதம் ஒரு செக்ஸ் சர்வே என்று எழுதித் தள்ளுகிறதே அதனை எதிர்த்து என்ன செய்தார்..?

குமுதம் ரிப்போர்ட்டர் இதழை நடத்துபவர்கள் செய்யும் கேவலமான வேலையை இதழ் தோறும் இந்தியா டுடே செய்கிறதே அதைக் கண்டு கவின்மலரின் நெஞ்சு கொதிக்க வேண்டாமா..?





ஆனால் கொதிக்கவில்லையே..?

தான் எழுதிய கட்டுரைக்கு மட்டுமே நான் பொறுப்பேற்பேன் என்று கவின்மலருக்குச் சொல்ல உரிமை உண்டு.

அத்துடன் நிறுத்திக் கொண்டால் அது நல்லது. இத்துறையில் உள்ள பெரும்பாலான திறமையான பத்திரிகையாளர்கள் இதைத்தான் செய்கிறார்கள்.

பத்திரிகையாளர்கள் பெரும்பாலோனோருக்கு பத்திரிகை நிறுவனங்கள் செய்யும் அனைத்து அயோக்கியத்தனங்களும் நன்கு தெரியும்.ஆனால் தங்கள் வாழ்க்கைச் சூழலுக்காக அதனைச் சகித்துக் கொள்கிறார்கள்.

தாங்கள் சகித்துக் கொள்ளும் அதே சமயம் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தை மட்டுமல்ல பிற எந்த நிறுவனத்தையும் கடுமையாகப் பெரும்பாலான நேரங்களில் விமர்சிப்பதில்லை.

ஏனென்றால் ஒன்றாம் தேதி வரும் சம்பளத்திற்காக தன் நிறுவனத்தை விமர்சிக்காமல் பிற நிறுவனத்தைப் பொது வெளியில் விமர்சித்தால் அதில் நேர்மை இல்லை என்பதும் அது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும்.அதனால் தன் நிறுவனத் தவறுகளை மட்டுமல்ல அனைத்து நிறுவனத்தின் தவறுகளையும் ஜீரணித்துக் கொண்டு கடந்து போகின்றார்கள்.தங்களின் நெருங்கிய வட்டத்துடன் விமர்சனத்தை நிறுத்திக் கொள்கிறார்கள்.

பத்திரிகையாளர்களின் வாழ்க்கைச் சூழல் அப்படி.இது சரியா தவறா என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உள்ளது.

ஆனால் கவின்மலரோ தான் வேலை பார்க்கும் இந்தியா டுடே,விகடன் நிறுவனங்கள் எவ்வளவு கேவலமாக எழுதினாலும் அவர்களை விமர்சிக்க மாட்டார்.

அப்சல் குரு தொடர்பான பதிவை கண்டுகொள்ளாத அதே சமயம், தினமணியில் சமச்சீர் கல்விக்கு எதிரான மதியின் கார்ட்டூனுக்காக கொதித்தெழுவார்.

தினத்தந்தி நிருபருக்கு ரிப்போர்ட்டிங்கே தெரியலை என்றும் நக்கல் செய்வார்.(ஸ்ஸ் பா முடியலை)

இந்தியாடுடே வில் வேலை பார்ப்பார்.அந்த நிறுவனங்கள் வக்கிரம்,ஆபாசத்தை, பகிரங்கமாய் கடை விரித்தாலோ,இந்துத்துவத்தை தனது எழுத்துக்களில் கொண்டு சென்றாலோ அதனை மறந்தும் திரும்பிப் பார்க்க மாட்டார்.

ஆனால் அதே சமயம் போட்டி குழுமமான குமுதம் ரிப்போர்ட்டர் எழுதினால் பொங்கு பொங்கு என்று பொங்குவார்.

விமர்சித்தால் அனைத்தையும் நடுநிலையுடன் விமர்சிக்க வேண்டும்.

அதை விடுத்து அனைத்தையும் விமர்சிப்பவர் என்று காட்டுவதற்காக,முற்போக்கு ஒளிவட்டம் சூட்டிக் கொள்வதற்காக,தன்னை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்துவதாக காட்டுவதற்காக தான் இருக்கும் பத்திரிகை உலகினை விமர்சிப்பதாக காட்டிக் கொண்டு,

சீனிவாசன் சம்பளம் கொடுத்தால் விகடனைத் தவிர்த்து அனைத்தையும் விமர்சிப்பது,இந்தியாடுடே காரன் சம்பளம் கொடுத்தால் அதை விடுத்து அனைத்தையும் விமர்சிப்பது என்பது பச்சோந்தித்தனம்.

இது எப்படி இருக்கிறது என்றால் சிபிஎம் காரர்கள் போயஸ் தோட்டத்தில் 2 சீட் வாங்கிய காலங்களில் அந்த விசுவாசத்துக்காக கருணாநிதியை திட்டுவதைப் போலவும்,கோபாலபுரத்தில் வாங்கும்  2 சீட் வாங்கிய காலங்களில் அந்த விசுவாசத்துக்காக ஜெயலலிதாவைத் திட்டுவதைப் போலவும் இருக்கிறது.

நாம் கூட கவின்மலர் குறித்த கடந்த விகடனில் பிரகாஷ்காரத் பேட்டி ஒரு என்சைக்ளோபீடியா என்னும் பதிவில் அவர் பத்திரிகையாளரா என்று விமர்சித்து அவர் நேர்காணலும் அதற்கான அவரது தயாரிப்புக்களும் கத்துக்குட்டித்தனமாக இருக்கிறது என்று எழுதி இருந்தோம்.ஆனால் அவரோ தான் கை தேர்ந்த அரசியல்வாதி என்பதை தனது செயற்பாட்டின் மூலம் நிருபித்து வருகிறார்.

முறையற்று அபகரித்த குமுதம் குழும நிறுவனங்களைத் தக்க வைப்பதற்காக தொடர்ந்து உள் நோக்கத்துடன் கருணாநிதியை விமர்சித்தும் ஜெயலலிதாவுக்குத் துதி பாடுவதையும் பிழைப்பாய் வைத்திருக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழை இப்பொழுது நடத்துபவர்களுக்கும்,

திமுக ஆட்சியில் தான் பெற்ற பொருளாதார இன்னபிற அனுகூலங்களுக்காக தொடர்ந்து கருணாநிதிக்குத் துதிபாடியும்,ஜெயலலிதாவை விமர்சித்தும் நக்கீரன் இதழை நடத்துபவர்களுக்கும்,

தனது திறமையைக் காட்டிலும் அதிகமான சம்பளமும் பதவியும் கொடுக்கிறார்கள் என்பதற்காய் தான் வேலை பார்க்கும் நிறுவனங்களின் மோசமான இதழியலைக் கண்டு கொள்ளாமல் அடைகாத்து,அதே சமயம் போட்டி இதழ்களின்&பிற இதழ்களைப் பகிரங்கமாய் பொதுவெளியில் விமர்சித்து போராளிப் பட்டம் கட்டிக் கொள்ளும் கவின்மலருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது..?

இதற்கான விடையை வருங்கால 'தமிழ்நாட்டு அருந்ததி ராய்' தான் சொல்ல வேண்டும்.


http://www.youtube.com/watch?v=KL1RXdNYNHQ


தொடர்புடைய இணைப்புக்கள்.

http://kalakakkural.blogspot.in/2012/05/blog-post_11.html

….