புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்திகள் குறித்தும் அதன் ’நடுநிலைமை’ குறித்தும் இன்று நாடெங்கிலும் பலரும் வியந்து கிடக்கிறார்கள்.
புதிய தலைமுறை தொலைக்காட்சி குறித்தும் அதனை நடத்தும் நிர்வாகம் குறித்தும் நாம் ஏற்கனவே இரண்டு பதிவுகள் வெளியிட்டுள்ளோம்.
இந்த நூற்றாண்டின் மிக மோசமான இனப்படுகொலையைப் புரிந்த இலங்கை அரசின் கொலைக்கரங்களுடன் கை கோர்த்துக் கொண்டு அவர்களின் தலைநகரமான கொழும்புவில் கல்வி வணிகம் தொடங்கியதையும் அம்பலப்படுத்தி இருந்தோம்.
நமது பதிவிற்கு தினத்தந்தியில் ஒரு கால் பக்க மறுப்பு வெளியிட்டு ஒப்பேற்றி இருந்தது புதிய தலைமுறை நிர்வாகம்.
எஸ்.ஆர்.எம்.நிறுவனத்தின் பண வெறி தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களை நன்கொடை,கட்டணம்,அபராதம்
என கசக்கிப் பிழிந்தது போதாது என்று இலங்கையில் கல்வி நிறுவனங்கள் துவங்கியது வரைக்கும் நீண்டது என்றால் அதன் அதிகார வெறியின் விளைவாக உருவெடுத்தது தான் காட்சி ஊடகம்.
தனது கல்வி நிறுவனங்களின் மூலம் அடிக்கும் கொள்ளையில் அன்பாகவும் அடாவடியாகவும் பங்கும் வழிப்பறியும் செய்யும் அரசியல் கட்சிகள்,அரசியல் தரகர்கள்,அதிகார மையங்கள்,சாதிக் கட்சிகள் போன்றவற்றில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இந்திய ஜனநாயகக் கட்சி என்னும் சாதிக் கட்சி முகமூடி மட்டும் போதாது மிகப்பெரிய செல்வாக்கு நமக்கு வேண்டும் என்னும் தொலை நோக்குத் திட்டத்தில் ஒன்றாய் உதித்தது தான் ஊடகத் துறையில் கால் பதிக்கும் அதன் முடிவு.
அதனை நோக்கிய பயணத்தின் முதல் அடி தான் புதிய தலைமுறை வார இதழ். அடுத்ததாக இப்பொழுது புதிய தலைமுறை தொலைக்காட்சி.
அதன் தொடர்ச்சியாக ஆங்கில
தொலைக்காட்சி,தமிழில் பொழுதுபோக்கு ஊடகம்,தமிழ் நாளிதழ்,பதிப்பகம் என அதன் கரங்கள்
இனிவரும் காலங்களில் நம்மை ஆக்டோபசாய்ச் சுற்றுவதில் இருந்து நாம் எப்படியும் தப்ப
வாய்ப்பில்லை.
புதிய தலைமுறை உரிமையாளர் பச்சமுத்து என்ற பாரிவேந்தரின் 2014 ஆம் ஆண்டு செயல் திட்டம் என்னவென்றால் மாணவர்களைச் சுரண்டிச்
சம்பாதித்த பணம் மற்றும் அதன் மூலம் உருவாக்கிய ஊடக செல்வாக்கைக் காட்டி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெல்வது.
அந்தக் கனவு நிறைவேறாத
பட்சத்தில் அவர்கள் உதவியுடன் ஏதாவது ஒரு மாநிலத்தில்
இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவது.
பத்தாண்டு செயல்திட்டம்
என்பது அரசியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுவது.சன் குழுமத்தைப் போல் நிறுவனத்தையும் வளர்த்தெடுப்பது அந்த இலக்கு நோக்கிய பயணத்திட்டத்தில் தான் இன்று அவரது ஊடகத்தை வளர்த்து வருகிறார்.இந்த பின்னணியிலும் விழிப்புணர்வுடனும் தான் நாம் புதிய தலைமுறை குழுமத்தை அணுக வேண்டும்.
உண்மை உடனுக்குடன் என்னும்
பிம்பத்துடன் செயல்படும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புரட்டையும் உண்மையைத் திரித்து மோசடியாகச் செய்தவற்றையும் பார்ப்போம்.
கடந்த மார்ச் 27,2003 இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான நேர்படப்
பேசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் மத்திய
அமைச்சருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், புதிய தலைமுறை தொலைக்காட்சி,தீவிரவாத அமைப்புகளின் துணையோடு மாணவர் போராட்டத்தைத் தூண்டுவதாகவும், இதன் விளைவாக சிபிஐ சோதனை போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று மிரட்டினார் என்றும் ஆனால் புதிய தலைமுறை யாருக்கும் அஞ்சாது என்றும் எத்தகைய
சவால்களையும் சந்திக்கும் என்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில், புதிய தலைமுறை இணைய பக்கத்திலும், முகநூலிலும் செய்தியையும் வீடியோவையும் ஒளிபரப்பினார்கள்.
இதன் வாசகங்கள் இது தான்.
இதனைப் பார்த்தால் புதிய
தலைமுறை தொலைக்காட்சி நடுநிலை தவறாமல் செய்தி வெளியிட்டமைக்காய் கடும் அச்சுறுத்தலை
எதிர்கொண்டு வருவது போலவும்,ஆனால் அதற்காய் அஞ்சப் போவதில்லை என்றும் வசன நடையில் ஏற்ற
இறக்கங்களுடன் இருக்கிறது.
இதனைப் பார்த்ததும் படித்ததும்
அறிவுசார் வட்டத்தினரும் இணையத்தில் உலவுபவர்களும் கருத்துரிமைக்கு சவாலா..?என்று கொதிக்கிறார்கள்.காங்கிரஸ்
சம்பந்தப்பட்டது என்பதால் அதன் வேகமும் அதிகமாக காணப்படுகிறது.
ஆனால் நமக்கோ விஜயகாந்த்
நடிக்கும் திரைப்படத்தில் லியாகத் அலிகான் வசனம் கேட்டது போல் உச்சந்தலை முதல் உள்ளங்கை
வரை ஜிவுஜிவு என்று இருக்கிறது.
இனி உண்மையில் புதிய
தலைமுறை சொல்லியது போல் சம்பவம் நடைபெற்றதா என்று பார்ப்போம்.
புதிய தலைமுறை தொலைக்காட்சி
மறு நாள் வெளியிட்ட வீடியோ.
//உங்களுக்காக புதிய தலைமுறை எத்தகைய சவால்களை எதிர்கொள்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக 27-03-2013 அன்றைய நேர்படப்பேசு நிகழ்ச்சி அமைந்தது.
தீவிரவாத அமைப்புகளின் துணையோடு மாணவர் போராட்டத்தைத் தூண்டுவதாகவும், இதன் விளைவாக சிபிஐ சோதனை போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான திரு. ஈ வி கே எஸ் இளங்கோவன், நமது அரங்கத்திலேயே, புதிய தலைமுறை குழுமத்திற்கு அச்சுறுத்தல்விடுத்தார்.//
இவர்கள் சொன்னதன் தொடர்பாக வீடியோக் காட்சிகள் இதில் இல்லை.
தீவிரவாத அமைப்புக்களின் துணையுடன் புதிய தலைமுறை மாணவர் போராட்டத்தை
தூண்டுகிறது விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் தொலைக்காட்சியில் காணப்படுகிறது என்று இளங்கோவன்
குற்றச்சாட்டு தெளிவாக வருகிறது.உடனே நெறியாளர் குணசேகரன் அதனைத் தொலைக்காட்சி சார்பில்
மறுக்கிறார்.அதன்பின் வீடியோவில் பதிவான காட்சிகள் நிறுத்தப்பட்டு விடுகிறது.
இதன் விளைவாக புதிய தலைமுறை சிபிஐ சோதனையை எதிர்கொள்ள நேரிட வேண்டும்
என்ற இளங்கோவனின் மிரட்டல் இதில் இல்லை..நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு முடிந்து அனைவரும்
எழும் பொழுது இளங்கோவன் சிபிஐ குறித்துப் பேசியதை
மீண்டும் இணைத்துள்ளார்கள்.பார்ப்பவர்கள் இளங்கோவன் மிரட்டுகிறார் என்று உணர்ந்து கொள்ளும்
படி காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.காங்கிரஸ் கட்சிக்கு இணையத்திலும் பொதுவெளியிலும் உள்ள எதிர்ப்புணர்வு
அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வது போல இருக்கிறது..
ஆனால் உண்மையில் நடந்தது அது அல்ல.இது தான் உண்மையில் நடந்தது.
இளங்கோவன் மாணவர் போராட்டத்தை புதிய தலைமுறை தூண்டி விடுகிறது என்று
சொல்கிறார்.புதிய தலைமுறையில் விடுதலைப்புலிகளின் ஆதரவு நபர்களின் ஆதிக்கம் இருக்கிறது
என்று சொல்கிறார்.நெறியாளர் மறுக்கிறார்.
(குணசேகரன் சார் நிகழ்ச்சியை எப்பவும் நல்லா
பண்றீங்க.பாராட்டுக்கள்..)
ஆனால் அடுத்து இளங்கோவன் சொன்னது,
//மாணவியிடம் 45 லட்சம் நன்கொடை பெற்று உங்கள் முதலாளி மோசடி வழக்கில்
சிக்கியிருக்கின்றாரே,,>அது தொடர்பில் சிபிஐ விசாரணை நடக்கிறதே அதற்கு என்ன சொல்கின்றீர்கள்
என்று கேட்கிறார்.//
இது புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்ட புரட்சிமுகம் காட்டும் வீடியோவில் இல்லை.
விடுதலைப்புலிகளை ஆதரித்துச் செய்தி வெளியிட்டமைக்கு சிபிஐ ரெய்டு
வரும் என்று இளங்கோவன் கூறியதாக இந்த வீடியோவில் பதிவாக வில்லை.
உடனே குணசேகரன் ஒரு பதிலைச் சொல்லுகிறார்.உடனே நிகழ்ச்சி முடிவடையாமல் நிறுத்தப்பட்டு
விடுகிறது.இது தான் நடந்தது.
இளங்கோவன் பழுத்த காங்கிரஸ்வாதியல்லவா.,எங்கு அடித்தால் எங்கு வலிக்கும் என்று நன்கு தெரிந்தவரல்லவா..! அதைச்
சரியாகச் செய்கிறார்.
ஆனால் புதிய தலைமுறையோ தனது முதலாளி மீதான மோசடிக் குற்றச்சாட்டு
குறித்தும் அது சிபிஐ விசாரணையில் இருப்பது குறித்தும் எவ்விதக் கருத்தினையும் தெரிவிக்காமல் இளங்கோவன் தொடர்புடைய உரையாடலை வெட்டியும் ஒட்டியும் தனது நடுநிலைத் தன்மைக்கும் உண்மைத்தன்மைக்கும் காங்கிரஸ் சவால்
விடுகிறது.மிரட்டுகிறது,ஆனால் அஞ்சப் போவதில்லை என சவடால் அடிக்கிறது.
(இந்த நிகழ்ச்சி நடந்தவுடன் காங்கிரஸ் எதிர்ப்புச் செய்தியை கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசிங்க என்று நிர்வாகத்திலிருந்து உத்தரவு வந்தது தொடர்பற்ற செய்தி)
மத்தியில் இவ்வளவு காலம் ஆட்சியில் இருக்கும் தனது கட்சியிடமும்,அதில் ஆதிக்கம்
செலுத்திய அமைச்சர்களிடமும்,அதிகார பீடங்களிடமும் மருத்துவம்,பொறியியல்,கலை,நர்சிங் என எண்ணற்ற கல்லூரிகளுக்கு
அங்கீகாரமும் அனுமதியும் பெற கொடுக்க வேண்டியதைக் கொடுத்தாலும், யாசித்தும் நின்ற ஒருவர்,அதன் மூலம் முறையற்றுப் பல்லாயிரம்
கோடிகளை அறுவடை செய்த பணத்தில் ஆரம்பித்த ஊடகத்தில் தன்னையும் தன் கட்சியையும் குற்றம்
சாட்டுவதை,அது வெளியிட்ட செய்திகளின் மூலம் நெருக்கடிக்கு உள்ளாவதை இளங்கோவனால் பொறுத்துக்
கொள்ள முடியவில்லை.
காங்கிரஸ் கட்சியின் மீதும்,தனது மீதும் குற்றம் சாட்டியவுடன், ஆத்திரப்பட்டு ,என்
மீது குற்றம் சாட்டுகிறாயே,உன் முதலாளி யோக்கியமா,,?மோசடிப் பேர்வழி தானே அதற்கு சிபிஐ
விசாரணை இருக்கிறதே என்று கொதிக்கிறார்.
இதில் இளங்கோவனின் திமிர்த்தனம் அம்பலப்படுத்தப்பட்டது.
ஆனால் புதிய தலைமுறையோ மோசடி முகத்தை புதியதாக கிடைத்த முற்போக்கு அரிதாரம் மூலம்
மறைக்கப் பார்க்கிறது.நடுநிலை,உண்மைத்தன்மை,யாருக்கும் அஞ்சாமை என பிதற்றுகிறது.
|
Add caption |
|
ஜூனியர் விகடனில் |
(சன் நியூஸ் தொலைக்காட்சியின் ஆசிரியர் ராஜா பாலியல் புகாரில் கைதுசெய்யப்பட்ட பொழுது அது குறித்து ஒரு வரிச் செய்தி கூட எழுதாத துப்புக்கெட்ட ஜுவி.,
சன் நியூஸ் தொலைக்காட்சியின் போட்டி ஊடகமான புதிய தலைமுறை முதலாளி சிபிஐ விசாரணைக்கு ஆஜரானதை இரண்டு பக்கம் துப்புத் துலக்குகிறது.
இந்த துப்புக் கெட்டத் தனத்திற்கு தமிழர்களின் நாடித் துடிப்பு என்பதற்குப் பதில் மாறனின் நாடித்துடிப்பு என்று பெயரிட்டு ஜூனியர் விகடனை வெளியிடலாம்.)
இந்த நிகழ்ச்சியை இப்படிப் பொருத்திப் பார்ப்பது தான் சரி.
ரெகுலராக காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரில் இருந்து கடைநிலை கான்ஸ்டபிள் வரைக்கும் மாமூல் கொடுத்தும் கூழைக் கும்பிடு போட்டும்
தனது பிழைப்பை நடத்தும் ரவுடி அல்லது பிக் பாக்கெட், திருடன் ஒருவன், தனக்கு புதியதாக
கிட்டிய அரசியல் கட்சித் தொடர்பு,சாதித் தலைவர் நட்பு,ரியல் எஸ்டேட் பணம் ஆகியவற்றின்
கிடைத்த புதுச் செல்வாக்கு காரணமாய் ஏரியாவில் போலீஸ்காரர் உட்பட யாரையும் மதிக்காமல்
மிடுக்குடன் தெனாவட்டாய் வருவான்.
இதைக் கண்டு ஆத்திரமுற்ற போலீஸ் காரர் நேத்து வரைக்கும் கூழைக்கும்பிடு
போட்டுக் கிட்டிருந்த பய,அய்யாட்ட சொல்லி நம்ம மேல கை வைக்காம பார்த்துக்கோங்க என்று
கெஞ்சிக் கிட்டிருந்தவன் இன்னைக்குத் தெனாவட்டுக் காட்டுறானே என்று மனதில் பொருமிக்
கொண்டே இருப்பார் ஏதாவது ஒரு சிறு பஞ்சாயத்தில் வசமாக மாட்டும் பொழுது.ஏண்டா ஒழுங்கா
இருக்கியா,இல்லை பழைய கேசைத் தூசி தட்டவா என்று மிரட்டுகிறாரே..? வசமாக மாட்டிக் கொண்ட பிக் பாக்கெட்டும் காரியவாதத்துடன் கொஞ்ச நாள் 'அமைதியாக' இருப்பான்.அதைப் போலத் தான் இங்கும்
நடந்திருக்கிறது.
இளங்கோவன்
பக்கா காங்கிரஸ் அரசியல்வாதி.அது மட்டுமல்ல நிகழ்ச்சி நடந்தது இரவு நேரமும் கூட.'நிதானமின்றி' 'நிலை தடுமாறி' இருந்திருக்கவும் நிச்சயம் வாய்ப்பு உண்டு.நிகழ்ச்சி
முடிந்தவுடன் தொலைபேசியில் முதலாளிக்கு போன் போட்டுச் 'செல்லமாய்ச்' சொல்ல வேண்டியதை
பொறுக்க மாட்டாமல் 'மதி மயங்கி' தனது ஆத்திரத்தை வெளிப்படையாய் காட்டி விட்டார்.
ஆனால் புதிய
தலைமுறையோ தனது முதலாளியின் மோசடி பகிரங்கமாக அம்பலப்படுத்தப்பட்டதை மறைத்து விடுதலைப்புலிகளின் ஆதரவினால்
தான் சிபிஐ ரெய்டு என்று புரட்சி முகம் காட்டுகிறது.நடுநிலை ஆதரவு வாக்குகளை அனைவரின் துணையுடனும் அமோகமாய் அறுவடை செய்கிறது.இத்தனை களேபரத்தில் புதிய தலைமுறையை ஆதரித்தவர்கள் யாரும்,அதே சமயத்தில் பச்சமுத்து வாங்கிய 45 லட்சம் நன்கொடையை சொல்லி வைத்தாற் போல் மறந்தும் விமர்சிக்கவில்லை என்பது அவலம்.
அன்றைய நேர்படப் பேசு நிகழ்ச்சியில் (உண்மையில் )நடந்தது என்ன என்று அதில் கலந்து கொண்ட
ஞாநியும் பதிவு செய்துள்ளார்.
ஆனால் புதிய
தலைமுறையோ உண்மையைத் திரித்து வீடியோ வெளியிடுகிறது.அது வெளியிட்ட மாதாந்திர காணொளித்
தொகுப்பில் இந்த பிரச்சனையை அப்படியே நீக்கி விட்டு வெளியிட்டுள்ளார்கள்.
முறையற்ற
கல்வி வணிகத்தில் கிட்டிய பல்லாயிரம் கோடியைப்
பாதுகாக்கும், தக்க வைக்கும் அதிகாரத்தை உருவாக்கும் நோக்கத்தில் எழுப்பப்பட்டது தான்
புதிய தலைமுறை.ஆகவே இந்த நிறுவனத்திற்கு அறம்,நடுநிலை போன்ற எதுவும் கிடையாது.அப்படிக்
காணப்பட்டால் அது முகமூடியாகத் தான் இருக்கும். பிற நிறுவனங்களை ஒப்பிடும் பொழுது இதன்
கயமைத் தனம் மிக அதிகமாகவும் இருக்கும்.
புதிய தலைமுறைக்கு
மாணவர்களின் தன்னலமற்ற போராட்டத்தை ஒளிபரப்ப வேண்டும்,அதனை அனைவரிடத்திலும் கொண்டு
சேர்க்க வேண்டும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிக்க வேண்டும், காங்கிரஸ் கட்சியைத்
தனைமைப்படுத்த வேண்டும்,அம்பலப்படுத்த வேண்டும் என்ற கொள்கை கோட்பாடு ஒன்றும் கிடையாது.இன்றைய
அவர்களின் வளர்ச்சிக்கும் பிழைப்புக்கும் அது பயன்படுகிறது.அதற்காய் அனைத்தையும் ஆதரிக்கிறார்கள்.ஒளிபரப்புகிறார்கள்.
ஈழத்தில் லட்சக்கணக்கில் தமிழர்கள் கொலை செய்யப்பட்டதற்கு பிரபாகரன் தான் காரணம் என்று சொல்லும் ஊரை அடித்து தன் உலையில்
போட்ட பச்சமுத்துவின் கூற்றையும் அதே கையோடு இலங்கை சென்று கல்வி நிறுவனங்கள் தொடங்கியதையும்,இன்றோ அதே பச்சமுத்துவின்
ஊடகம் நாடெங்கிலும் தனி ஈழக் கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தை முதல்வரிசையில் நின்று ஒளிபரப்புவதையும் ஒப்பிட்டு நோக்கினால் புதிய தலைமுறை பச்சமுத்துவின் செயல்பாட்டின் பின்னால் எவ்வளவு பிழைப்புவாதம் இருக்கிறது என்பதை அறியலாம்.
பண வெறியில்
இலங்கையில் எஸ்.ஆர்.எம்.கல்வி நிறுவனங்கள் துவங்கியது போல் நாளையே இலங்கையில் தொலைக்காட்சி தொடங்கினார்கள்
என்றால் அங்குள்ள சிங்களர்களின் உரத்த குரலாக அது ஒலிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும்
இல்லை.
மாறன் சகோதரர்கள்
காவிரி பிரச்சனையிலும் அது தொடர்புடைய போராட்டங்களிலும் உண்மையைத் தங்களுக்கு ஏற்ற வகையில் சன் டிவியில் ஒரு தொனியிலும்
உதயா டிவியில் ஒரு தொனியிலும் இயங்குகின்றார்கள் என்பதைப் பார்த்தவர்கள் தாம் நாம்.
புதிய தலைமுறை
அவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல.இந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் அவர்களை அணுகுவது தான்
சிறந்தது.
இல்லையென்றால் இன்னும் சிறிது காலத்தில் கே.டி.மாறன் சகோதரர்களிடம் நாம் கூட்டணி வைத்துக் கொண்டு இவர்களிடமிருந்து கருத்துரிமையைக் காக்க போராட வேண்டிய அவலம் நடைபெற்றாலும் ஆச்சரியம் இல்லை.
.